காஞ்சிபுரம், செப். 18 –
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 51வார்டுகளில் மக்களின் குறைகளை கண்டறிய கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட குறைதீர் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. அதில் அளிக்கப்படும் மக்களின் அடிப்படை தேவைப் பற்றிய குறைகளுக்கு 48 மணிநேரத்தில் தீர்வுக் காணப்படும் என மேயர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் குறைகளை மாநகராட்சி நிர்வாகம் கண்டறிந்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும், மேலும், இதை துரிதப்படுத்தும் நோக்கில் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட மக்கள் குறைதீர் சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மையத்தை காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் , காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மேயர் மகாலட்சுமி ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர், இதன் செயல்முறை விளக்கங்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து அதனை செயல்படுத்தியும் பார்த்தனர்.
இத்திட்டம் குறித்து மேயர் மகாலட்சுமி கூறுகையில் ,காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளுக்கு 1800 425 2801 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்னிணை பயன்படுத்தி தொடர்புகொண்டு குறைகள் தெரிவிக்கப்பட்டால், உடனடியாக அந்த குறைகள் பதிவு செய்யபட்டது என, குறுஞ்செய்தியாக குறைகளை தெரிவித்த நபருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் சென்றுவிடும். மேலும், அந்த குறைகளை கண்டறிந்து சரிசெய்து முடித்த பின்னர் குறையினை பதிவு செய்த நபரை தொடர்பு கொண்டு சரிசெய்யப்பட்டுவிட்டது எனவும் தெரிவிக்கப்படும். மழைக்காலங்களில் 24 மணிநேரமும் செயல்படும் வகையிலும் செயல்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அடிப்படை தேவைகளான தெரு விளக்கு வசதி, குடிநீர் வசதி, பாதாளசாக்கடை ,தூய்மை பணி, கொசு மருந்து தெளித்தல் ,நாய் மற்றும் கால்நடைகள், பிளாஸ்டிக் பயன்பாடு, ஆக்கரமிப்பு, மழைநீர் வடிகால்வாய், சாலை பராமரிப்பு பணி, உள்ளிட்ட பல தேவைகள் இந்த சேவை மையம் மூலம் தீர்த்து வைக்கப்படும்.
மேலும், 48மணிநேரத்தில் மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் குறைகள் சரிசெய்யப்படும் என உறுதி அளித்தார். குறிப்பிட்ட நேரத்தில் பணிகள் முடிக்கப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் துணை மேயர் குமரகுருநாதன், ஆணையர் கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் , அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி -மேயர் மகாலட்சுமி யுவராஜ்