சென்னை, மார்ச். 16 –
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் நேற்று (15.3.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களுக்கும் மற்றும் தமிழ் அமைப்பிற்கும் ஊடகத் துறைக்கும் என மொத்தம் 21 விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
தமிழ்ப் புலவர்களையும், தமிழறிஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1970-இல் தைத்திங்கள் இரண்டாம் நாளை திருவள்ளுவர் திருநாள் எனக் கடைப்பிடிக்க ஆணையிட்டார். மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், சென்னையில் வள்ளுவர் கோட்டம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது, கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, திறந்தும் வைக்கப்பட்டது. இளம் பருவத்திலேயே குறளின் பெருமையை அறிந்திடும் வகையில் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவச் செல்வங்களுக்கு குறள் பரிசு வழங்கும் திட்டத்தையும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.
சங்கப் புலவர்களை நினைவு கூறும் வகையில் 1990-ஆம் ஆண்டு சங்கப் புலவர்களான ஒக்கூர் மாசாத்தியாருக்கு சிவகங்கையிலும், நல்லூர் நத்தத்தனாருக்கு செங்கல்பட்டு மாவட்டம் இடைகழி நாட்டிலும், மாங்குடி மருதனாருக்கு தென்காசி மாவட்டம் மாங்குடியிலும், கருவூர் புலவர்கள் பன்னிருவருக்கு கரூரிலும் நினைவுத் தூண்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் நிறுவப்பட்டு சிறப்புச் செய்யப்பட்டது. இதுபோன்று எண்ணற்ற தமிழறிஞர்களுக்கும், தமிழ்ச் சான்றோர்களுக்கும், சிலைகள் நிறுவியும், மணிமண்டபங்கள் அமைத்தும், அவர்களது பெயரில் விருதுகள் தோற்றுவித்தும் சிறப்புச் செய்துள்ளார்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியானது 2004-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும், தமிழறிஞர்களையும், தமிழ்ச் சான்றோர்களையும் சிறப்பிக்கும் விதமாக, பாரதியார் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக, மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் நாள், அரசின் சார்பில் ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாகக்’ கடைப்பிடிக்கப்படும், பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் தேடித் தொகுக்கப்பட்டு, அவை வடிவம் மாறாமல் செம்பதிப்பாக வெளியிடப்படும் போன்ற 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு, சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. மேலும், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி விருது” என்ற புதிய விருது தோற்றுவிப்பு, ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக கனவு இல்லம் வழங்கப்படும் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் நேற்று தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், மறைந்த திரு.மு.மீனாட்சிசுந்தரம் அவர்களுக்குரிய 2022ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதினை அவரது மனைவி திருமதி வசந்தா அவர்களுக்கும், 2021ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது திரு.க. திருநாவுக்கரசு அவர்களுக்கும், 2021ஆம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது நீதியரசர் சந்துரு அவர்களுக்கும், 2021 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது திரு. நாஞ்சில் சம்பத் அவர்களுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது முனைவர் குமரிஅனந்தன் அவர்களுக்கும், மகாகவி பாரதியார் விருது திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்களுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்கும், கம்பர் விருது திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கும், சொல்லின் செல்வர் விருது திரு. சூர்யா சேவியர் அவர்களுக்கும், ஜி.யு.போப் விருது திரு.அ.சு.பன்னீர் செல்வன் அவர்களுக்கும், உமறுப்புலவர் விருது திரு. நா. மம்மது அவர்களுக்கும், இளங்கோவடிகள் விருது திரு. நெல்லை கண்ணன் அவர்களுக்கும், தேவநேயப்பாவாணர் விருது முனைவர் கு. அரசேந்திரன் அவர்களுக்கும், சிங்காரவேலர் விருது கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களுக்கும், மறைமலையடிகளார் விருது திரு. சுகி. சிவம் அவர்களுக்கும், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது முனைவர் இரா. சஞ்சீவிராயர் அவர்களுக்கும், அயோத்திதாசப் பண்டிதர் விருது திரு. ஞான. அலாய்சியஸ் அவர்களுக்கும், 2020-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது முனைவர் வ. தனலட்சுமி அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி, சிறப்பித்தார்.
மேலும், தந்தை பெரியார் விருது மற்றும் அண்ணல் அம்பேத்கர் விருது பெற்ற விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக தலா ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக விருதுகள் வழங்கப்பட்டப் பிற விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக தலா இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், அத்துடன் அனைத்து விருதாளர்களுக்கும் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கி, பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் சிறப்புச் செய்தார்.
மேலும், 2021 ஆம் ஆண்டிற்கான சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருதினை, உயிர்மை திங்களிதழுக்கு வழங்கிடும் வகையில் அதன் ஆசிரியர்
திரு. எஸ். அப்துல்ஹமீது என்கிற மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு விருதுடன், விருதுத் தொகையாக இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், தகுதியுரையும், கேடயத்தையும் வழங்கி, பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் அவர்கள் சிறப்புச் செய்தார்.
அதேபோன்று 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருதினை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கிடும் வகையில் அச்சங்கத்தின் தலைவர்
திரு.பெ. இராஜேந்திரன், பொருளாளர் திரு. சைமன் ஞானமுத்து மற்றும் செயலவை உறுப்பினர் திரு. முனியாண்டி மருதன் ஆகியோருக்கு விருதுடன், விருதுத் தொகையான ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் தகுதியுரையும் கேடயத்தையும் வழங்கி, பொன்னாடைகளை அணிவித்து முதலமைச்சர் சிறப்புச் செய்தார்.
இவ்விழாவில், தொழில், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, துணை மேயர் மு. மகேஷ் குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் (பொறுப்பு) செ. சரவணன், அரசு உயர் அலுவலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.