கும்பகோணம், மார்ச். 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமாகவும், 108 வைணவ தலங்களில் 20 வது தலமாக போற்றப்படும், நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி தேர் திருவிழாவின் 4 ஆம் நாளான இன்றிரவு கல்கருட சேவை நடைப்பெற்றது. அதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

நாச்சியார்கோயிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் சீனிவாச பெருமாளும், வஞ்சுளவல்லி தாயாரும் தம்பதி சமேதராய் திருமண கோலத்தில் நின்ற நிலையில் அருள் பாலிப்பதால், இங்கு தாயாருக்கென்று தனி சன்னதி இல்லை. 108 வைணவ தலங்களில் 20வது திவ்யதேசமாகவும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் 14வது திவ்ய தேசமாகவும் போற்றப்படுகிறது. இத்தலத்தில், பங்குனி திருத்தேர் திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கமாகும்.

அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கி நாள்தோறும் யாளி, கிளி, சூரிய பிரபை, சேஷ, அன்னபட்சி, கமல, அனுமன், யானை, குதிரை என பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்றது.

மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நான்காம் நாளான இன்றிரவு உலக பிரசித்தி பெற்ற கல்கருட சேவை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக் கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கல்கருடனை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து 9 ஆம் நாளான வருகிற 25 ஆம் தேதி திங்கட்கிழமை காலை திருத்தேரோட்டமும், நண்பகல் தீர்த்தவாரியும் பின்னர் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சப்தாவர்ணத்துடன் இவ்வாண்டிற்கான பங்குனி தேர் திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது‌.

மேலும் தொடர்ந்து நடைப்பெற்று வரும் பத்து சாட்கள் நிகழ்ச்சிக்கான அனைத்து  ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பிரபாகரன், கோவில் பணியாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து வெகுச்சிறப்பாக செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here