மயிலாடுதுறை, பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் ஆயிரம் பெண்களுக்கு அன்னக்கூடை மாங்கன்று மற்றும் பெண் விசுவாசி ஒருவருக்கு மாடுகன்று உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி அதிமுகவினர் வெகுச்சிறப்பாக அவ்விழாவினைக் கொண்டாடினார்கள்.
அக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் எம்எல்ஏவும் அதிமுக மாவட்ட செயலாளருமான பவுன்ராஜ் நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் நல்லாட்சி செய்தால் மக்களே வந்து ஓட்டு போடுவார்கள் எனவும், ஆனால் திமுக நல்லாட்சி செய்யாமல் குடுகுடுப்பை அடித்து பிரச்சாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று அக்கூட்டத்தில் திமுகவின் ஆட்சிக்குறித்து விமர்சனம் செய்து தொடர்ந்து உரை நிகழ்த்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேரூராட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏவும் மாவட்ட செயலாளருமான எஸ் பவுன்ராஜ் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் சங்கரதாஸ், சிவகாசி சின்னத்தம்பி, திருப்பூர் சாந்தி, மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் முனைவர் கோமல் அன்பரசன் சிறப்புரையாற்றினர்.
இதில் நலத்திட்ட உதவியாக அதிமுக கட்சியின் தீவிர தொண்டரும் விசுவாசியுமான ஐவநல்லூர் ஊராட்சி பனையூர் கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு மாடு கன்று மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரம் பேருக்கு அன்னகூடையுடன் மாங்கன்று வழங்கப்பட்டது.
முன்’னதாக கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் கூறுகையில் குடும்ப அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்களாட்சி தத்துவத்தை கொண்ட இயக்கம் அதிமுக. குடும்ப ஆட்சி வரக்கூடாது என்ற அண்ணாவின் கொள்கையை மூடி மறைத்து குடும்ப ஆட்சியை கொண்டு வந்தவர் கருணாநிதி. அண்ணாவின் கொள்கையை கடைபிடித்து அதிமுகவை துவங்கியவர் எம்ஜிஆர் அதை கடைசி வரை கடைபிடித்தவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா.நல்லாட்சி நடத்தினால் மக்களே வந்து ஓட்டு போடுவார்கள், 2011 இல் வெற்றி பெற்ற அதிமுக அரசின் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நடத்திய நல்லாட்சியால் 2016 இல் மீண்டும் முதல்வராக வெற்றி பெற்றார். ஆனால் திமுக நல்லாட்சி நடத்தாமல் குடுகுடுப்பை அடித்து பிரச்சாரம் செய்கிறது என்றார்.