கும்பகோணம், டிச. 02–
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்காவில் பேரூராட்சி சார்பில் ரூ. 30 லட்சம் பொருள் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 பூங்காக்களை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்.
பாபநாசம் தாலுக்கா தேர்வுநிலை பேரூராட்சியில் 15 வது நிதி குழு மான்ய திட்டத்தின் கீழ், பெரியண்ணன் நகர் மற்றும் போஸ்வா நகரில் ரூ. 30 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 பூங்காக்களை சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவஹர்லால், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் கனகராஜ், கோட்டாட்சியர் பூர்ணிமா, வட்டாட்சியர் பூங்கொடி, பேரூராட்சி பெருந்தலைவர் பூங்குழலி கபிலன், துணைப் பெருந்தலைவர் பூபதி ராஜா, செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இப்பூங்காவில் பெரியவா்கள் நடைப்பயிற்சி செய்வதற்கான தளம், குழந்தைகள் விளையாட்டு மையங்கள், சறுக்கு, ஊஞ்சல், நீரூற்றுகள், மரங்கள் வைத்து அப்பூங்கா அழகுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், மனதைக்கவரும் வகையில் புல் தரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.





















