கும்பகோணம், டிச. 12 –
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள தேவனாஞ்சேரி கொத்தங்குடி பகுதியில் வெகுநாட்களாக சீர் கெட்டுக் கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சாலையில் வாழைக்கன்று நட்டு கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
தேவனாஞ்சேரி கொத்தங்குடி சாலை சுமார் 4.5 கி.மீ தூரம் சென்று திருப்புறம்பியத்தில் முடிவடைகிறது. அச்சாலை கடந்த 2009 2010 போடப்பட்டதாகவும் அதற்கு பின்பு ஏறத்தாழ சுமார் 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை அச்சாலைகள் புதுப்பிக்கபடவில்லை என அப்பகுதிமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், வேளாண்மை விரிவாக்க மையம், கால்நடை மருத்துவமனை, நேரடி நெல் கொள்முதல் நிலையம், சேமிப்புக் கிடங்கு உள்ளிட்ட அப்பகுதிகள் அடிக்கடி பயன்படுத்தும்முக்கிய சாலையாக அதுவிளங்கி வருகிறது.
இந்நிலையில் அச்சாலையைதான் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் பள்ளி மாணவர்கள் என பல தரப்பட்டவர்கள். தினசரி கடந்து செல்லவேண்டிய நிலைவுள்ளதெனவும், இந்நிலையில் மிகவும் சீர் கெட்ட நிலையில் உள்ளதால் அவர்கள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு உட்பட்டு தினசரி விபத்துக்களை சந்திக்கும் நிலைதான் உள்ளதெனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பலகட்டமாக உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் உள்ள அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு புகார் மனு மற்றும் வாய் மொழி வாயிலாக கொண்டு சென்றும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என மேலும் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சீர் கெட்டுக்கிடக்கும் அச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலையில் வாழைக்கன்று நட்டும், தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு இக் கோரிக்கையை எடுத்துச் செல்லும் வகையிலும் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி இந்திய கம்யூனிஸ்ட் (மா) கட்சியின் கிளைச் செயலாளர் ஐயப்பன், தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் நாகமுத்து, ஒன்றிய துணைத் தலைவர் குணசேகரன், மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் கணேசன், பாட்டாளி மக்கள் கட்சி விவசாய அணி பொறுப்பாளர் கோவி தங்கராசு, விடுதலை சிறுத்தை கட்சி விவசாய அணி மாநில துணைச் செயலாளர் நாகப்பன், கிளை பொறுப்பாளர்கள் சுப்பிரமணியன், ரவி, சின்னதுரை, கலையரசன், ராஜேந்திரன், சகுந்தலா, மருதாம்பாள், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழைக்கன்றினை சாலையில் நட்டபடி கோரிக்கை முழக்கத்தில் ஈடுப்பட்டனர்.






















