திருவாரூர், செப். 05-
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகரத்தில் அமைந்துள்ளது பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தியாகராஜர் திருக்கோவில். இத்திருக்கோயிலில் இன்று மாலை நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், விளமல், மடப்புரம், அடியக்கமங்கலம், சேந்தமங்கலம், குளிக்கரை, அம்மையப்பன் மாவூர், மாங்குடி, குன்னியூர், திருநெய்பேர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த கன மழையின் காரணமாக திருவாரூரில் அமைந்துள்ள தியாகராஜர் சுவாமி திருக்கோவில் முழுவதும் இரண்டு அடிக்கு மேல் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இருந்து சுரங்கப்பாதை வழியாக வடக்கு வீதியில் அமைந்துள்ள பிடாரி குளத்திற்கு எப்பொழுதும் மழை பெய்தால் மழை நீர் அதன் வழியாக வடிந்து சென்று விடும். பிடாரி குளத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதால் கோவிலில் இருந்து செல்லக்கூடிய வடிகால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் திருவாரூர் தியாகராஜர் கோவிலை சுற்றி சூழ்ந்து கடல் போல் காணப்படுகிறது.
மேலும், இரண்டாம் பிரகாரம் மூன்றாம் பிரகாரம் ஆயிரம் கால் மண்டபம் உள்ளிட்ட கோவிலின் முக்கிய பகுதிகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் விரைவாக பிடாரி குளத்தினை தூர்வாரி வடிகால் அடைப்பை எடுத்து இனி வரும் மழைக்காலங்களில் கோவிலில் தண்ணீர் தேங்காதவாறு செயல்பட வேண்டும் என பக்தர்கள் நகர மற்றும் மாவட்டத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.