திருவாரூர், ஆக. 01 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள செறுவண்டூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மனைவி சுமதி (39), தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர்களது வீட்டின் அருகே உள்ள தேவேந்திரன் மனைவி லீலாவதி (35), இவர் கடந்த ஜனவரி மாதம் சுமதியை ஜாடை மாடையாக பேசியதில் தகராறு ஏற்பட்டு குடவாசல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 7 மாதங்களாக முன்பகை ஏற்பட்ட நிலையில், இன்று செறுவண்டூர் அருகே உள்ள அன்னுக்குடி கிராமத்தில் சாலை ஓரமாக சுமதி கணவர் விஜயகுமார் (43) மற்றும் அவரது சகோதரர் செந்தில்குமார் (40), நீலாவதி கணவர் தேவேந்திரன் (42), தேவேந்திரன் மகன் சந்தோஷ்குமார் (21) ஆகிய நான்கு பேருக்கும் குடும்ப முன்பகை காரணமாக அருவாள் மற்றும் பாறைக்கற்களைக் கொண்டு ஒருவரைவொருவர் சரமாரியாக தாக்கி கொண்டுள்ளனர். இதில் இரு தரப்பைச் சேர்ந்த நான்கு பேருக்கும் தலை, கை, கால் என பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் குடவாசல் காவல்நிலைத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம்பட்ட நான்கு பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சம்பவம் குறித்து குடவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.