மீஞ்சூர், ஜூன். 20 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போதை ஒழிப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இப்பேரணியை மாநில இணை செயலாளர் செல்வராஜ் துவக்கி வைக்க, மீஞ்சூர் பாசறை தலைவர் வே.விநாயகமூர்த்தி , பாசறை செயலாளர் சிவா, மாவட்ட தலைவர் கலையரசன், மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட துணை செயலாளர் ஜெய்கணேஷ் உள்ளிட்டவர்கள் தலைமை ஏற்று இவ்விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள்.
பழவேற்காட்டில் இருந்து துவங்கிய இருசக்க வாகன போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திருப்பாலைவனம், தத்தை மஞ்சு, காட்டூர், திருவல்லைவாயல், வழியாக பயணித்து மீஞ்சூரில் முடிவுற்றது.
பின்பு தொடங்கிய பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னோடிகள் உரை நிகழ்த்தும் போது, கடந்த 10 ஆண்டுகளில் 70 சதவிகிதம் போதைப் பழக்கங்கள் அதிகரித்து உள்ளது எனவும், அதில் சமூகத்தை சீரழிக்கின்ற கஞ்சா, அபின், ஹெராயின் ,போன்ற கொடிய போதைக்கு இந்தியாவில் 10 கோடி பேர் அடிமையாகி உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் இப் பழக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், பெரும்பாலானவர்கள் உழைப்பை நம்பி அன்றாட பிழைப்பு நடத்தும் சாதாரண ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் எனவும் அப்போது தெரிவித்தனர்.
தொடர்ந்து இப்போதைப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து கப்பல் வழியாகவும், விமானம் வழியாகவும் சட்டவிரோதமாக கொண்டு வரப்படுகிறது எனவும், மேலும் இக்கொடிய போதை பொருட்களை தடுக்க ஒன்றிய பாஜக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும் அப்போது அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் இப்பழக்கத்திலிருந்து, இளைஞர்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் காப்பாற்ற இந்த வாகனப் பிரச்சாரம் தமிழக முழுவதிலும் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்,
இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய ஜனநாயக சங்கத்தினர் திரளாக பங்கேற்றனர்.