திருவாரூர், டிச. 18 –
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மேலத்திருப்பாலக்குடி கிராமத்தில் ராமு என்பவர் தன்னுடைய சிறு வயது முதல் இறக்கும் தருவாயிலும், ஆண்டு தோறும் விடாது, மார்கழி மாத கூட்டு வழிபாட்டை நாள்தோறும் மார்கழி மாதம் முழுவதும் 80 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்துள்ளதாக அவ்வூர் மக்களின் மூலம் அறியப்படுகிறது.
முன்னதாகவே இந்த கிராமத்தில் இவருக்கு முன்பு வாழ்ந்த பெரியவர்கள் இந்த மார்கழி மாத கூட்டு வழிபாட்டை நடத்தி வந்துள்ளார்கள் கிட்டத்தட்ட இந்த கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இந்த மார்கழி மாத வழிபாடு இன்றளவும் நடைபெற்று வருவதென்பது குறிப்பிட தக்கதாகும்.
மேலும் ராமு என்ற அப்பெரியவர் மட்டும் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு மேலாக அவ்வழிபாட்டை சிரத்தையோடும் பக்தியோடும் அக்கிராமத்தின் மீது கொண்ட பற்றுடனும் நடத்தி வந்துள்ளார். மேலும் ஒரு மார்கழி மாதத்தில் அவருடைய இளைய மகன் கர்ணன் என்பவர் மரணம் அடைந்து விட்டார். ஆனால் மார்கழி மாத வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக தன்னுடைய மகன் இறந்து இருந்தாலும் பிரேதத்தை வீட்டில் வைத்துவிட்டு கோவிலுக்கு வெளியில் நின்று இறை பாடல்களை பாடி மார்கழி மாத வழிபாட்டை நடத்தினாரம் அப் பெரியவர் என அவ்வூரார் சொல்கிறார்கள்.
ஏனென்றால் திடீரென்று மார்கழி மாத வழிபாட்டை நிறுத்தினால் ஊருக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற அவருக்குள் எழுந்த அச்சத்தில் தன் மகன் இறந்த பொழுதிலும் அவர் மார்கழி மாத வழிபாட்டை நடத்தி முடித்தார் என அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தொடர்ந்து அவர் மறையும் வரை மார்கழி மாத கூட்டு வழிபாட்டை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் அப்பெரியவரின் நினைவைப் போற்றும் வகையில் அந்த ஊரைச் சேர்ந்த பெரியவர்கள் சிறார்கள் அவருடைய நினைவாக அவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்பி வருகிறோம் என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.
அவர்கள் அனைவரும் தொடர்ந்து ஆண்டு தோறும் விடியற்காலையில் எழுந்து மார்கழி மாதம் முதல் நாளிலிருந்து தை மாத முதல் நாள் வரை தொடர்ந்து மார்கழி மாத கூட்டு வழிபாட்டை சிறப்பாக நடத்தி வருகிறார்கள் மேலும் காலச்சென்ற அப்பெரியவரை அந்நாளில் நினைவுகளைக் கூறி பின் அவரை வணங்கி அந்த ஊர் பெரியவர்களும் சிறார்களும் மார்கழி மாத கூட்டு வழிபாட்டை சிறப்பாக துவங்கினார்கள்.
மேலும் பஜனையில் தேவாரம் திருவாசகம் உள்ளிட்ட பாடல்கள் முருகன் விநாயகர் பெருமாள் உள்ளிட்ட கடவுள்களில் பாடல்களை இசைக்கருவி இசைத்து ஊரில் உள்ள தெருக்களை சுற்றி வந்து கோவிலில் வந்து பாடி முடிப்பார்கள் இந்த நிகழ்வு மார்கழி மாதம் முழுவதும் நடைபெறும் மேலும் தை மாதம் ஒன்றாம் தேதியும் நடைபெறும்.