திருவாரூர், டிச. 28 –
தமிழக அரசு கோரியுள்ள பேரிடர் நிதியினை வழங்க கோரியும் மத்திய அரசை கண்டித்தும், எதிர் வரும் ஜன 8 ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருவாரூரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போதுதெரிவித்தார்.
திருவாரூர் தனியார் அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாவட்ட கூட்டம் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்றார்.
கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் தெரிவிக்கும் போது, தமிழ்நாட்டில் வழக்கத்திற்கு மாறாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. அதேப் போல் 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெய்த மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் மக்கள் இயல்பு நிலை மற்றும் மாவட்டம் முழுவதும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்தும் மிகவும் பாதிப்புக்கு உள்ளகிவுள்ளதெனவும். அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும், சென்னையில் வழக்கத்தை விட 59 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக மேற்கண்ட மாவட்டங்களில் மனிதர்களுக்கு பாதிப்பு, உயிரிழப்பு, கால்நடைகள் உயிரிழப்பு, விவசாயம் பாதிப்பு போன்றவை ஏற்பட்டுள்ளது. இதற்கு நிவாரணமும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி சாலைகள், கட்டடங்கள், பாலங்கள் போன்றவையும் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இவை அனைத்தையும் மாநில அரசு மூலம் சரி செய்வதற்கு சாத்தியமில்லை எனவேதான் பேரிடர் நிதியிலிருந்து ரூ 21 ஆயிரத்து 699 கோடியினை வழங்குமாறு தமிழகத்திற்கு வந்த மத்திய குழுவினிடமும், டெல்லியில் பிரதமரை சந்தித்தபோதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதற்கான நிதியினை இதுவரையில் ஒரு ரூபாய் கூட வழங்காமல் ஆண்டுதோறும் வழக்கமாக வழங்கப்படும் நிதியை மட்டும் வழங்கியுள்ளனர். அது மட்டுமின்றி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ள கருத்து அருவருக்க தக்க கருத்தாக இருந்து வருகிறது. அக்கருத்து அவர் வகிக்கும் பொறுப்பிற்கு ஏற்றவாறு இல்லையெனவும் குற்றம்சாட்டினார்.
ஆதலால் ஒன்றிய அரசு தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து தமிழ்நாடு அரசு கோரியுள்ள பேரிடர் நிதியினை முழுமையாக வழங்கிட கோரியும், ஒன்றிய அரசை கண்டித்தும் அடுத்த மாதம் ஜன 8 ந் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்படும் என அப்போது முத்தரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிஜேபி போன்றே தொடர்ந்து சர்ச்சைக்குரிய நபராக இருந்து வருவதால் அவர் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது எனவும், மேலும் சென்னையில் பெட்ரோலிய எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடல் வாழ் உயிரினங்கள், பறவைகள், மீனவர்கள் மற்றும் மீனவர்களின் படகுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மிகப்பெரிய தொகையினை தமிழக அரசு வசூல் செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இது மட்டுமின்றி தற்போது உரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு காரணமாக அந்த பகுதியில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த தனியார் நிறுவனம் மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என முத்தரசன் தெரிவித்தார்.