பழவேற்காடு, செப். 04 –
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த குளத்து மேடு பழங்குடி கிராமத்தில் மத்திய உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலையம் சிபா/எஸ்.டி.சி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் கடலோர பழங்குடி மக்களுக்கு உவர் நீர் மீன் தொழில்நுட்பங்களோடு வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் கொடுத்து மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்தும் விதத்தில் பண்ணை அமைக்கப்பட்டு அதில் வளர்ப்பு இறால் மீன் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிபா திட்டத்தில் குளத்து மேடு இருளர் பழங்குடி மகளிர்களை தேர்ந்தெடுத்து ஒரு குழுவாக இணைத்து இக்குழுவிற்கு வேலு நாச்சியார் மகளிர் குழு என்று பெயர் சூட்டி இவர்களை பங்காளர்களாக தேர்ந்தெடுத்துள்ளனர். இருளர் பழங்குடியினர் பாரம்பரியமாக இறால், நண்டு ஆகியவற்றை பிடிக்கும் மற்றும் வளர்க்கும் தொழில் ஈடுபட்டுள்ளனர்.
இது அவர்களுக்கு பழக்கமான தொழிலும் என்பதால் இந்த தொழில்நுட்பங்களை கையாளும் போது இவர்களுக்கு தொழில் வாய்ப்பு, சுய வருமானம், வங்கியில் சேமிப்பு, குடும்பம் மற்றும் சமுதாய முன்னேற்றங்கள் மற்றும் வாழ்வாதார வழிகளும் கிடைக்கின்றன. இதன் பொருட்டு இருளர் பழங்குடி பெண்கள் பண்ணை அமைத்து சிறு தொழில் செய்து வருகின்றனர். இதற்கான துவக்க விழாவில் நண்டு வளர்ப்பு முறைகள் குறித்து சிபா திட்டத்தின் தலைவியும் மூத்த விஞ்ஞானியுமான டாக்டர்.சாந்தி விளக்கமளித்தார்.
இத்திட்டத்தின் மூத்த நிர்வாக அலுவலர் நவீன் குமார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், இந்நிகழ்வில் திட்ட மூத்த தொழில்நுட்ப அலுவலர் சிவஞானம் மற்றும் குளத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த நிர்வாகிகள்,காட்டூர் மற்றும் தோனிரேவு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி ஆதிதிராவிட மக்கள் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.