கும்மிடிப்பூண்டி, மார்ச். 14 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பஜாரில் காலுாராம் (வயது 55) என்பவருக்கு சொந்தமான கவிதா ஜுவல்லரி எனப்படும் அடகு மற்றும் விற்பனை கடை உள்ளது.
இக்கடையில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நகை வாங்க வந்ததாகக் கூறி அக்கடையில் இருந்து சுமார் மூன்று பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியை அங்கிருந்து திருடிச்சென்றுள்ளார்.
இத்திருட்டுக் குறித்து அக்கடையின் உரிமையாளர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் தங்கள் கடைக்கு வந்த அப்பெண்மணி தனக்கு மூன்று சவரன் எடை கொண்ட தங்கச் சங்கிலிகளை காட்டுமாறு கூறியதாகவும், அப்போது கடையில் பணிப்புரியும் ஊழியர் அப்பெண்ணிடம், பல்வேறு மாடல்களில் உள்ள 10 எண்ணிக்கையிலான தங்கச் சங்கிலிகளை அவரிடம் காட்டியதாகவும், அப்போது அப்பெண் அதிலிருந்து ஒரு செயினை எடை போடுமாறு கூறியுள்ளார். எடை போடும் போது பார்வைக்காக வைத்திருந்த சுமார் மூன்று சவரன் எடை கொண்ட தங்க சங்கிலி ஒன்றை திருடி கொண்டு இருசக்கர வாகனத்தில் அவர் தப்பி சென்றதாகவும் அப்புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்திருட்டுக் குறித்து காவல் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளர் காலுராம் அளித்த புகாரின் அடிப்படையில் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அத்திருட்டை உறுதி செய்து தொடர்ந்து, தப்பி தலைமறைவான அப்பெண்ணை கடந்த 13 நாட்களாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் வளசரவாக்கம் பகுதியில் மறைந்திருந்த அப்பெண் மற்றும் அவரது கணவன் ஆகிய இருவரையும் இன்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அத்திருட்டில் ஈடுபட்டது ப்ரியா என்கிற பிரியங்கா வயது 34 என்பதும், மேலும், அவரது கணவர் ராமச்சந்திரன் வயது 39 என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் மேலும் திருடப்பட்ட அந்நகையை வாங்கிய ஒருவரையும் கைது செய்து அவர்கள் அனைவரிடமும் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.