கும்பகோணம், மே. 02 –
கும்பகோணத்தில் 108 திவ்ய தேசங்களில் 3 வது தலமாக போற்றப்படுகிற சாரங்கபாணி திருக்கோவிலில் வருகிற 14-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் பெரிய தேரினை களிமேடு தேர் விபத்து ஒரு நபர் விசாரணை ஆணையர் குமார் ஜெயந்த் இன்று நேரில் சென்று பாதுகாப்புக் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கும்பகோணத்தில் சாரங்கபாணி சுவாமி திருக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 3வது திவ்ய தேசமாகும் இத்திருக்கோவிலில் சித்திரை தேரோட்டமானது வருகிற 14ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அத்தேர் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தேர் அலங்கரம் சுமார் 110 அடி உயரமும் 46 அடி அகலமும் கொண்டதாகவும் 450 டன் எடை கொண்டதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இத்தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் கடந்த வாரம் தஞ்சை அருகே உள்ள களிமேடு கிராமத்தில் தேரோட்டத்தின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். அவ்விபத்துக் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையம் அமைத்து உள்ளது அதன் ஆணையராக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவ்வாணையர் இன்று கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் நடைப்பெற்று வரும் தேர் கட்டுமானப் பணிகளையும், தேர் எந்தெந்த வீதி வழியாக செல்லும் என்றும் இதன் தேர் செல்லக்கூடிய பகுதியில் மின்சார வயர்கள் ஏதும் உள்ளதா என்றவாறு அதன் பாதுக்காப்பு நிலைக் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது தேர் செல்லும் பாதையில் மின்சார வயர்கள் அனைத்தும் பூமிக்கடியில் புதைக்கப் பட்டுள்ளதாகவும் தேரோட்டம் நடைபெறும் போது முன்னும் பின்னும் காவல்துறையினர் வெளி நபர்கள் தேரின் அருகே செல்லாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் கொத்தனார்கள் மட்டுமே தேரின் அருகே செல்வார்கள் என்று கோவில் தரப்பிலிருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
அதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் குமார் ஜெயந்த் தஞ்சை விபத்து நடந்ததை அடுத்து அங்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது . இங்கு பெரிய தேர் தேரோட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர். அதனால் இங்கு வந்து ஆய்வு செய்ததாகவும் இதன் உயரம் 110 அடி என்று சொல்லப்படுகிறது பார்க்க பிரமாண்டமாக உள்ளது என்றும் மேற்கொண்டு கோட்டாட்சியர் லதா தலைமையில் குழு அமைத்து இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி தேரோட்ட பணிகள் செய்யப்படும் என்றும் மேலும் களிமேடு விபத்து குறித்து விசாரணை பற்றி தற்போது கூற இயலாது என்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்கள் வெளியில் வந்தபிறகு அவர்களிடத்திலே உரிய விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்யப்படும் என்றும் களிமேடு கிராமத்தில் ரோடின் உயரம் அதிகமாக இருந்ததால்தான் விபத்து நடைபெற்றதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு அது விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்
மேலும், இதனை தொடர்ந்து கும்பகோணத்தை சுற்றியுள்ள பல்வேறு ஆலயங்களில் உள்ள தேர்களை ஆய்வு செய்கிறார் எனத் தகவல் தெரிவிக்கிறது.