திருவண்ணாமலை, ஜூலை. 27-
திருவண்ணாமலை நகராட்சியில் பணிபுரிந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட வந்த தூய்மை தொழிலாளர்களை பணிக்கு உடனடியாக சேர்க்க வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கர் நகராட்சி ஒப்பந்தம் மற்றும் நிரந்தர பணியாளர்கள் நலச்சங்கத்தினர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு நேற்று ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை நகராட்சி கிரீன் வாரியார் ஒப்பந்த உரிமையாளர் விக்னேஷ்வரன் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரியும் கடந்த 13ந் ஆண்டுகளாக திருவண்ணாமலை நகராட்சியில் பணிபுரிந்து வரும் சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட் ராஜா, வினோத்கண்ணா ஆகியோரை பணியிட மாற்றம் செய்யக்கோரியும் வேலை நீக்கம் செய்யப்பட்ட தூய்மைத் தொழிலாளர்களை பணிக்கு உடனடியாக சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் டாக்டர் அம்பேத்கர் நகராட்சி ஒப்பந்தம் மற்றும் நிரந்தர பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கே.மலர்வண்ணன் தலைமை தாங்கினார். இதில் சங்க செயலாளர் எஸ்.செல்லகருங்கன், பொருளாளர் கே.விநாயகம் மற்றும் தூய்மை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஆட்சியரகத்தில் ஆட்சியரிடம் தலித் விடுதலை இயக்க மாநில இணைப்பொதுச் செயலாளர் த.கதிர்காமன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் நகராட்சி ஒப்பந்த சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் மனித உரிமைகள் ஆணையம் நாட முடிவு செய்துள்ளோம். மேலும் திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களிலிருந்து அகற்றப்பட்ட குப்பை தொட்டிகளை மீண்டும் வைக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.