சென்னை, ஏப். 11 –
செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர், இன்று (11.04.2022) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இணைத்து பதிவு செய்யும் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து பத்திரிகையாளர்களுக்கு காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்.ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் டாக்டர்.உமா, இ.ஆ.ப., மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.நாராயணபாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது :
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 23.07.2009 அன்று உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தினை, முதலமைச்சராக இருந்து தொடங்கி வைத்தார்கள். இக்காப்பீட்டுத் திட்டத்தினை மீண்டும் புதியதொரு விரிவான காப்பீட்டுத் திட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் 10.01.2022 அன்று பொதுத் துறை காப்பீட்டு நிறுவனம் அதிக சிகிச்சை முறைகளுடன் மேலும் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தவும், அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள், பருவ இதழ் செய்தியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தியும் தொடங்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தில் கூடுதலான மருத்துவ வசதிகளுடன் தற்போது 1700 மருத்துவமனைகள் சிகிச்சை வழங்கி வருகின்றன. இதில் 800 அரசு மருத்துவமனைகளும், 900 தனியார் மருத்துவமனைகளும் சிறப்பான சிகிச்சை வழங்கி வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் 1090 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இக்காப்பீட்டுத் திட்டத்தில் வேறு மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்தோ, 6 மாதத்திற்கு மேல் தமிழ்நாட்டில் வசித்து வந்தோர், இலங்கை முகாமிற்கு வெளியே வசிக்கும் இலங்கைத் தமிழர்கள், ஓய்வூதியம் பெறும் முதியோர் மற்றும் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளின் குடும்பம், கோவிட் தொற்றினால் பெற்றோரை இழந்த குடும்பம் ஆகியோர் இணைந்து பயன்பெற்று வருகின்றனர்.
கடந்த நிதிநிலை அறிக்கையில் 78-ஆவது அறிவிப்பாக அறிவித்தவாறு செய்தித்துறை, அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ் செய்தியாளர்களின் குடும்பங்களுக்கு எவ்வித வருமான உச்சவரம்பின்றி, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற 1414 செய்தியாளர் குடும்பங்களை இணைக்கும் விதத்தில், இதுவரை 258 செய்தியாளர்கள் குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டு, தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு நடைபெறுகிறது. அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர் நண்பர்களின் குடும்பங்கள் இதில் இணைந்து பயன்பெற வேண்டுகிறோம்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் 15.03.2022 அன்று அதிநவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை அரங்கம், சுமார் ரூபாய் 35 கோடி மதிப்பிலான இக்கருவியை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்கள். எய்ம்ஸ் போன்ற தனியார் மருத்துவமனைகளில் இதுவரை பயன்பெற்று வந்த இந்த அதிநவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை இப்போது அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த ரோபாட்டிக் கருவியினால் கடந்த 07.04.2022 அன்று திருப்பத்தூரைச் சேர்ந்த திரு.கிருஷ்ணன், வயது 44 சிறுநீர் பாதையில் புற்றுநோய் கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, நலமுடன் இரண்டாம் நாளே வீடு திரும்பியுள்ளார். தமிழகத்தில் இதுவொரு மருத்துவ சாதனையாக கருதப்படுகிறது என்று தெரிவித்தார்.