பொதுமக்கள் புகார் கூறிய காரணத்துக்காக பழிவாங்கும் நோக்கில் கீரப்பாக்கம் ஊராட்சியில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்படுத்திய ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

செங்கல்பட்டு, செப். 9 –

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திடம் கீரப்பாக்கம் ஊராட்சி பொதுமக்கள் கொடுத்துள்ள புகார் மனுவில், கீரப்பாக்கம் ஊராட்சியில், ஊராட்சி செயலராக லீமாரோஸ்லின் என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றார்.

 

இதில் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் சாலை, குடிநீர், தெருவிளக்கு, கால்வாய் உள்ளிட்ட பல்வேறு குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலரிடம் சென்று அவ்வப்போது பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

இதில் புகார் கூறும் பொதுமக்களை மேற்படி ஊராட்சி செயலர் மிரட்டும் வகையில் செயல்பட்டு வந்தார். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலையை கொடுக்க மறுத்து பழிவாங்கி வந்தார்.

மேலும் ஊராட்சியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை. ஆனால் அனைத்து பணிகளையும் செய்தது போன்று கணக்கு காட்டி வருகிறார். அது மட்டுமல்லாமல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வந்த மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் முறைகேடுகள் செய்து வந்தார்.

இதுதொடர்பாக கீரப்பாக்கம் ஊராட்சி பொதுமக்கள் கடந்த 05-07-2021 அன்று தங்களிடம் புகார் கூறினர். இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் சரியான முறையில் இருந்தது. ஆனால் தற்போது தங்களிடம் புகார் கூறிய ஒரே காரணத்துக்காக பழிவாங்கும் நோக்கில் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்காக கீரப்பாக்கம் ஊராட்சியில் வெளியிடப்பட்ட 2021-2022-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் பயங்கர குளறுபடியை ஏற்படுத்தியுள்ளார்.

இதில் கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 4-வது வார்டில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை 1, 2, 3, 5 உள்ளிட்ட பல்வேறு வார்டுகளில் மாற்றம் செய்துள்ளார்.

இதுபோல் 1, 2, 3, 5, 6, 7 மற்றும் 8 ஆகிய வார்டுகளில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை 4-வது வார்டில் மாற்றம் செய்துள்ளார். மேலும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பெயர்களையும் மாற்றியுள்ளார்.

ஆனால் இதுவரை கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் கூறியபடி திருத்தம் செய்யவில்லை. எனவே மேற்படி கீரப்பாக்கம் ஊராட்சியின் வாக்காளர் பட்டியில் உள்ள குளறுபடிகளை சரிசெய்தும், சம்மந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர் .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here