தஞ்சாவூர், ஏப். 26 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சாவூர்  பெரிய கோயிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது. அதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தஞ்சை மாநகராட்சி சார்பில் சுமார் 3௦௦ க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தேரோட்டம் நடைபெறுவதற்கு முன் அனைத்து ரத வீதிகளையும் தூய்மைப் படுத்தியதுடன் தேரோட்டம் முடிவடைந்த அன்று இரவுக்குள் நான்கு ரத வீதிகளிலும் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து தூய்மை பணியை மேற்கொண்டனர்.

ஆங்காங்கே பக்தர்கள் வீசிய குடிநீர் பாட்டில், நெகிழி பொருட்கள் மற்றும் அன்னதானம் நடைபெற்ற இடங்களில் இருந்த வாழை இலை, பாக்கு மட்டைகள் உள்ளிட்ட உணவு கழிவுகளை உடனுக்குடன் அகற்றி தூய்மைப்படுத்தினர்.

தூய்மைப் பணியாளர்களின் மகத்தான பணி எதிரொலியாக நான்கு ரத வீதிகள் மற்றும் தஞ்சை நகரம் முழுவதும் தூய்மையாக காட்சியளித்தன . பெரிய கோவில் சித்திரை தேரோட்டத்தின் போது பலர் பணியாற்றி இருந்தாலும்,  தூய்மைப் பணியாளர்களின் பணியானது பொதுமக்களின் பாராட்டை பெற்றது.

தூய்மை பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த சேவையை பாராட்டி கவுரவிக்கும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் அவர்களுக்கு விருந்தளித்தனர் .

தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நன்றி தெரிவிக்கும் விருந்தில் 3௦௦ க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள், மேற் பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

சிக்கன் பிரியாணி – சிக்கன் கிரேவி – முட்டை – தயிர் சாதம் – ஐஸ்க்ரீம் உள்ளிட்டவைகளை ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தங்கள் கரங்களால் தூய்மை பணியாளர்களுக்கு பரிமாறி அவர்களது அர்ப்பணிப்பு சேவைக்கு நன்றி தெரிவித்தனர்.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜோதி அறக்கட்டளை செயலர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி தன்னார்வலர்கள் ஆர்த்தி ஜெயந்தி தர்ஷினி உள்ளிட்டோர் செய்திருந்தனர் .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here