சென்னை: செப், 7 – நிலவின் தென் துருவத்தில் 2019 செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திரயான் 2 பயணத்தின் விண்கலம் தரையிறங்கும் நிகழ்வைக் காண்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்துக்குச் செல்கிறார்.
இந்தியா முழுக்க 8ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட விண்வெளி வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன், அந்த நிகழ்வின் போது பிரதமர் கலந்துரையாடுகிறார்.
அறிவியல் மற்றும் அதன் சாதனைகளை தீவிரமாகப் பாராட்டி வரும் பிரதமராக, மோடியின் இஸ்ரோ பயணம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு தார்மீக ரீதியில் ஊக்கம் தருவதாக இருக்கும். புதுமை சிந்தனைகள் மற்றும் கேள்வி கேட்டு விஷயங்களை அறிந்து கொள்ளும் உத்வேகத்தை இளைஞர்களுக்கு அளிப்பதாகவும் இது இருக்கும்.
சந்திரயான் 2 பயணத் திட்டத்தில் தனிப்பட்ட முறையில் அக்கறை காட்டிய மோடி, “மனதளவில் இந்தியன், உத்வேகத்தில் இந்தியன்! இது முழுக்க முழுக்க உள்நாட்டில் உருவாக்கி செயல்படுத்தப்பட்ட திட்டம் என்பது ஒவ்வொரு இந்தியரையும் அதிக மகிழ்ச்சிக்குரியதாக ஆக்கியிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
“விக்ரம் என்ற தரையிறங்கும் வாகனத்தை நிலவில் இறக்குவதற்கான முயற்சியை 2019 செப்டம்பர் 7 ஆம் தேதி இந்திய நேரப்படி 0100 மணிக்கும் 0200 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த வாகனம் இந்திய நேரப்படி 0130-க்கும் 0230-க்கும் இடைப்பட்ட நேரத்தில் தரையைத் தொடும்” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.