சென்னை, ஏப். 24 –
மும்பையில் உள்ள மத்திய மீன்வள கல்விக்கழகத்தின் 15-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மத்திய வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை செயலாளரும், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழும தலைமை இயக்குனருமான டாக்டர் திரிலோச்சன் முகபத்ரா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா, மீன்வள அறிவியல் துறைகளில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். கல்வியில் சிறந்து விளங்கி பல்கலைக்கழக பதக்கம் வென்ற மாணவர்களையும் தாம் வாழ்த்துவதாக அவர் குறிப்பிட்டார். பயிர்கள் மற்றும் கால்நடைகளின் வேளாண் முறைகளோடு மீன்வள முறையை ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க முடியும் என்று கூறினார்.