கும்பகோணம், ஜூன். 24 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் கீழவீதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பாஜக மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் மற்றும் பேச்சாளராக பங்கேற்ற கோவை சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் சிறப்புரை நிகழ்த்தினார். முன்னதாக அவருக்கு அக்கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
மேலும் அப் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய அவர், தமிழகத்தில் ஒவ்வொரு துறைகளும் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது எனவும், மேலும் எங்களுக்கு வாக்களித்தவர்கள் கூட இல்லை, வாக்களிக்காதவர்கள் ஏன் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என வருத்தப்படுவார்கள் என தமிழக முதல்வர் சொல்லிக் கொண்டுள்ளார். ஆனால் நிலைமை வேறு, வாக்களித்தவர்கள் எல்லாம் இவர்களுக்கு ஏன் வாக்களித்தோம் என எண்ணும் அளவிற்குதான் தற்போதைய திமுக அரசு நடந்து வருவதாக அப்போது அவர் குற்றம் சாட்டினார். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றார்கள். இன்றும் நீட் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது ஒரு சில இடங்களில் தவறாக வழிநடத்தக் கூடிய மாணவர்கள் உயிரிழப்பது துரதிஷ்டவசமானது எனவும், இப்போது நீட் தேர்வு பற்றி திமுக வாய் திறக்கவில்லை எனவும் உரை நிகழ்த்தினார்.
அப் பொதுக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க.வரதராஜன் உட்பட பாஜக.வை சேர்ந்த மாநில, மாவட்ட ஒன்றிய, பேரூராட்சி, கிளை முன்னணி நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியைச் சார்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.