இராமநாதபுரம், செப். 6-

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார் 2021 ஆம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு வழங்கிப் பாராட்டினார்.

விழாவில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார் பேசியதாவது:
குழந்தைகளின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல தொண்டு. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி அறிவு வழங்குவதோடு, அவர்களது தனித்திறன்களை மென்மேலும் வளர்த்திடவும் சிறந்த குடிமக்களாக உயர்த்திடவும் அயராது உழைக்கிறார்கள். தமிழக அரசு வழிகாட்டுதலின்படி 9 முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் 97 சதவீத ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இவ்விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன், என்றார்.

முன்னதாக 30 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கூடுதல் ஆட்சியர் வழங்கினார். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி,  மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் புனிதம், மாவட்ட கல்வி அலுவலர்கள் முத்துசாமி, (ராமநாதபுரம்), முருகம்மாள் (மண்டபம்), சேதுராம் (பரமக்குடி) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here