திருவண்ணாமலை ஜூலை.15,  திருவண்ணாமலை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கடந்த ஜூலை 13 ஆம் தேதி தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 39 வார்டுகளிலும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதிப் படுத்துவதற்காக நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
இந் நிலையில் திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவிலுள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 39 வார்டுகளிலும் உள்ள பூத்களில் நேற்று முன் தினம் கொரோனா தடுப்பூசி போடும் பணிக்காக மருத்துவ குழுவினர் அனுப்பிவைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கிவைத்த அவர், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள 100 சதவிதம் இலக்கு அடைய நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
நகராட்சி பகுதியில் 1 லட்சத்து 51 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இவர்களில் இதுவரை 32 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இன்னும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. மக்களிடையே விழிப்புணர்வு குறைவாக உள்ளது. நகராட்சி பகுதியில் நடைபெற்றற தேர்தலின் போது காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிகளுக்கு சென்று மாலை வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தியது போல நகராட்சி பகுதியிலுள்ள பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். இதற்காக நகராட்சி பணியாளர்கள் தன்னார்வலர்கள் மூலம் வீடுவீடாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நகராட்சி பகுதியில் தடுப்பூசி முகாம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறும். விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு ஆகிய தினங்களிலும் சிறப்பு தடுப்பூசி போடும் முகாம் நடைபெறும். நேற்று முன்தினம் 1800 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 800 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மக்களிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் குறைவாக உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே உயிரைக் காக்க ஒரே தீர்வு எனவே அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த முகாமில் நகராட்சி ஆணையர் இரா.சந்திரா, கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், தாசில்தார் பி.வெங்கடேசன், சுகாதார நலப்பணிகள் உதவி திட்ட மேலாளர் டாக்டர் விஜய்ராமன், மருத்துவ அலுவலர் ஜெ.விஜய்ஆனந்தன், நகராட்சி கணக்காளர் எம்.பாலசுப்பிரமணியம், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பிரட், வினோத் கண்ணா, கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் ரேவதி, கிராம நிர்வாக அலுவலர் காமேஷ்குமார், மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here