காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிப் பெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை, செப். 29 –
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடைப்பெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல் நியாமாகவும், சுதந்திரமாகவும் நடைப் பெற்றிடவும், தேர்தல் நடத்தை விதிகளின்படி, தேர்தல் காலங்களில் ஒலிப்பெருக்கிகள் போன்றவற்றை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பயன்படுத்தவும் முறைப்படுத்தவும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது
தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இவ்வாணை அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது தேர்தல் பிரச்சாரங்களுக்கு எந்தவிதமான வாகனங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிப் பெருக்கிகளை காலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை மட்டுமே பயன் படுத்த வேண்டும். மேலும் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்களில் பயன் படுத்த அதற்கான முன் அனுமதியை காவல்துறையிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும் எனவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காதவாறு தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பயன் படுத்த வேண்டும்.
நேரம் கடந்தோ முன் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படும் அனைத்து வித ஒலிப்பெருக்கிகளும் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.