பள்ளிக்கரணை, ஏப். 26 –
முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் பா.வளர்மதி முன்னிலையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் தேர்தலில் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.
அதிமுக கழக அமைப்பு தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சென்னை புறநகர் பகுதி மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு மனுக்களை வழங்கும் நிகழ்வு சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இத்தேர்தலுக்கு பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் பா.வளர்மதி ஆகியோர்கள் அதிமுக தலைமை நியமித்து இருந்தனர்.
இதில் சென்னை பறநகர் பகுதி மாவட்ட அதிமுக செயலாளராகப் பதவி வகித்து வரும் முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அப்பதவிக்கு தனது விருப்ப மனுவை பொறுப்பாளர்களிடம் வழங்கினார். அப்போது, ஒருமனதாக மீண்டும் மாவட்ட செயலாளராக கே.பி.கந்தன் தேர்ந்தெடுப்படுவார் என அங்கிருந்த சில நிர்வாகிகள் பேசி கொண்டிருந்தனர்.
அப்பொழுது முன்னாள் எம்எல்ஏ வெங்கட்ராமன், மற்றும் மாநில மாணவரணி துணை செயலாளரும், கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவருமான மணிமாறன் ஆகியோர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக தங்களது விருப்ப மனுவை பொறுப்பாளர்களிடம் வழங்கினார்கள்.
இதை பார்த்த மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஆதரவாளர்கள் விருப்ப மனுவை அளித்த கோவிலம்பாக்கம் மணிமாறனிடம் ரகளையில் ஈடுப்பட்டனர். ஒரு கட்டத்தில் மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் ஒன்று கூடி மாவட்ட செயலாளர் பதவிக்கு விருப்ப மனு அளித்த மணிமாறனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தாக்க முயன்றதால் இருதரப்பினர்க்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு சலசலப்பு காணப்பட்டு கைகலப்பாக மாறும் சூழலால் ஏற்பட்டு அங்கு பரபரப்பு காணப்பட்டது.
இந்நிலையில் அங்கிருந்த தேர்தல் பொறுப்பாளர்கள் இருதரப்பினருக்கு இடையே நடைபெறவிருந்த கோஷ்டி மோதலை தடுத்து நிறுத்தினர். இது சம்பந்தமாக நிர்வாகிகள் சிலர் கூறும்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாவட்ட செயலாளர் பதவி வகித்து வந்த கே.பி.கந்தன் அவருடைய ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கியதால் சென்னை புறநகர் பகுதி மாவட்டத்தில் பெரும் அதிருப்தி இருந்து வந்தது. அதை தொடர்ந்து அதிமுகவில் முக்கிய பொறுப்புகளையும் அவருடைய ஆதரவாளர்களுக்கு வழங்கி வந்ததாகவும், புகார் தெரிவித்தனர்.
மேலும் அதிமுக கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்த முன்னோடிகள் கே.பி.கந்தனால் ஒதுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி அதிருப்தியாளர்கள் கட்சி அமைப்புத்தேர்தல் எப்பொழுது வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகவும் கே.பி.கந்தன் மீதுள்ள அதிருப்தியின் காரணமாகதான் மாவட்ட செயலாளர் பதிவுக்கு போட்டியிட இருவர் தங்களது விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து கே.பி.கந்தன் மீது சென்னை புறநகர் பகுதி மாவட்டத்தில் அதிருப்தி இருந்து வந்த நிலையில் மீண்டும் மாவட்ட செயலாளராக கே.பி.கந்தன் தேர்தெடுத்தால் அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஏற்கனவே சிலர் அதிமுகவிலிருந்து மாற்று கட்சிக்கு சென்ற நிலையில் தொடர்ந்து அதிமுகவினர் மாற்று கட்சிக்கு செல்லக்கூடிய நிகழ்வுகளும் நிகழும் எனவும் தெரிவித்தனர்.