கும்பகோணம், மார்ச். 02 –

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ஆதி தீமிதி திரௌபதியம்மன்; திருக்கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 181வது ஆண்டாக நடைபெற்ற தீமிதி திருவிழாவில், ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பய பக்தியோடு தீ மிதித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி மகிழ்ந்தனர்.

கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரத்தில் பிரசித்தி பெற்ற பழமையான ஆதி தீமிதி திரௌபதியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுப் பெருவிழா ஐந்து  நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அது போல 181வது ஆண்டு பெருவிழாவின் தொடக்கமாக, கடந்த மாதம் 28ம் தேதி திங்கட்கிழமை கணபதி ஹோமம், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக, மாசி மாத சிவராத்திரியையொட்டி வரும் அமாவாசை தினமான இன்று மாலை தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இதற்காக அரசலாற்றங்கரையில் இருந்து சக்தி கரகம், வேல் சகிதமாக விரதம் மேற்கொண்டிருந்த ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் தங்களது பிராத்தனைகளை நிறைவேற்றியமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஆதி தீமிதி திரௌபதியம்மன் திருக்கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர்.

இத்தீமிதி நிகழ்ச்சியினை யொட்டி தாராசுரம் மற்றும் இன்றி அருகில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இத்தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டு உற்சவர் அர்ஜூனருடன் அருள் பாலித்த திரளபதி அம்மனை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து இரவு நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, அழகிய மின்னொளியில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. நாளை 03ம் தேதி வியாழக்கிழமை மாலை புஷ்ப அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம் பின்னர் 04ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீ தர்மர் பட்டாபிஷேக வைபவத்துடன் இவ்வாண்டிற்காண ஆண்டுப்பெருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here