கும்பகோணம், ஜூன். 15 –
கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியின் முதல்வராக துரையரசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது பல்கலைக்கழக மானிய குழு நிதியே தவறாக பயன்படுத்துவது, அரசாணை எண் 51 க்கு முரணாக தேர்வு நெறியாளர் பணியை கூடுதலாக கவனித்து வருவது, முன்னாள் மாணவர் சங்கத்தை முடக்கும் வகையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதி வழங்காமல் இருப்பது, முன்னாள் மாணவர் சங்கம் பெற வேண்டிய நிதியை பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில் முறைக் கேடாக நிதி வசூல் செய்வது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை இவர் மீது கல்லூரிப் பேராசிரியர்கள் சுமத்தி வருகின்றனர்.
தமிழக அரசு இக்கல்லூரியின் முதல்வர் மீது நடவடிக்கை எடுத்து, உடனடியாக பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இன்று மாலை கல்லூரி நிறைவுப் பெற்றதும் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என்றும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
இன்று நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வரை பணியிட மாறுதல் செய்யக்கோரி பேராசிரியர்கள் கல்லூரி முதல்வர் அறை முன் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.