குடவாசல், மார்ச். 10 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அன்னியூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இவ்வூராட்சியில் உள்ளது. இவ்வூராட்சியின் முக்கிய பகுதியான பிரதான சாலையிலிருந்து இக்கிராமத்திற்கு உட்புறமாக செல்லக்கூடிய மாரியம்மன் கோவில் சாலை மற்றும் அதிலிருந்து பிரியக்கூடிய கிளை சாலைகள் என அனைத்து சாலைகளும் மிகவும் பழுதடைந்து உள்ளதெனவும், மேலும் இச்சாலைகள் மழைக்காலங்களில் சேறும் சகதியாக மாறிவிடுவதாகவும், கோடைக்காலங்களில் காய்ந்த சகதிகள் புழுதியை கிளப்பி வருவதாகவும், மேலும் குண்டு குழியுமாக இருக்கும் சாலையில் நடைப் பயணித்து வரும் சிறியவர், முதியவர் கர்ப்பிணித் தார்மார்களில் யாரேனும் ஒருவராவது தினந்தோறும் விழுந்தெழாமல் வீடு திரும்பவதில்லை எனவும், நடைப் பயணத்திற்கு இந்நிலை என்றால் வாகன ஓட்டிகளின் பயணத்தைப் பற்றி கேட்கவா வேண்டும் என்கிறார்கள் இக்கிராமத்து மக்கள்.
மேலும் இப்பிரச்சினைக் குறித்து ஊராட்சி மன்றத்தில் தெரிவித்தும், பல்வேறு காலக்கட்டங்களில் பல போராட்டங்கள் வாயிலாக நிர்வாகத்திற்கு தங்கள் பிரச்சினையை எடுத்துரைத்தும் எழாமல் கண் துயிலும் நிலையில் இருப்பது போல் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் அம்மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இது தொடர்பாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக சாலை சீரமைக்க வேண்டி இந்த சாலையில் நடவு நட்டு போராட்டம் நடத்தியதாகவும், இத் தகவல் அறிந்து அங்கு வந்த அரசு அதிகாரிகள் மழைக்காலம் முடிந்ததும் இச்சாலையினை சீரமைத்து தருவதாக தெரிவித்து சென்றார்கள். இருப்பினும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை என்றும் மேலும் இக்கோடைக்காலத்தில் இச்சாலையில் எழும்பும் புழுதியால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு பொதுமக்கள் குழந்தைகள் மாணவர்கள் உள்ளாகி பெரும் மனம் மற்றும் உடல் வேதனைகளுக்கு ஆளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இனியும் அரசு தாமதிக்காமல் சாலையை விரைந்து சீரமைத்து தரும்படி கோரிக்கை விடுக்கின்றனர்.
பேட்டி: பிரபு அன்னியூர் கிராமவாசி




















