பூவிருந்தவல்லி, ஏப். 02 –
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பைப்பாஸ் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் பயணிகள் போல் வெளியூருக்கு கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக பூந்தமல்லி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஆய்வாளர் பாலசுப்பிரமணி, உதவி ஆய்வாளர் ராதா உள்ளிட்ட போலீசார் அங்கு இரண்டு பெரிய கைப்பையுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர்.
அப்போது அந்நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதையடுத்து அவரை அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டு மேலும் அவர் கையில் வைத்திருந்த கைப்பையில் கஞ்சா (போதை பொருள்) பண்டல்கள் இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக காவல்துறையினர் .அதனை கைப்பற்றி அதனை எடைப்போட்டு பார்த்ததில், 11 கிலோ 600 கிராம் கஞ்சா இருப்பதை உறுதிப்படுத்தினார்கள். மேலும் அதனின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் என தெரியவந்தது.
மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட அந்நபரிடம் போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் அவர் 52 வயதுடைய அழகர்சாமி என்பதும், மேலும் அவர் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரித்ததில் அழகர்சாமி திருப்பூரில் இருந்து அரசு பேருந்து மூலம் ஆந்திரா சென்று அங்கு மொத்தமாக கஞ்சா வாங்கிக்கொண்டு மீண்டும் அரசு பேருந்து மூலம் பூவிருந்தவல்லி வந்து இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி திருப்பூர் செல்ல இருந்தது தெரியவந்தது.
மேலும் அழகர்சாமி கஞ்சா கடத்தியது குறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில் தான் திருப்பூரில் உள்ள கல்யாணப்பத்திரிக்கை, மற்றும் வால் போஸ்டர்கள் அச்சிடும் பிரிண்டிங் பிரஸ்சில் மாதம் ரூ. 10 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்ததாகவும், தனக்கு அந்த சம்பளம் குடும்பத்தை நடத்த போதவில்லையெனவும், இந்நிலையில் மேற்படி குடும்ப வருமானத்திற்கு என்ன செய்யலாம் என்றிருந்த எனக்கு திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்து வரும் ஆசாமிகள் சிலரை தொடர்பு கொண்டு அவர்கள் சொன்னதை கேட்டு ஆந்திரா வந்து கஞ்சா வாங்கி திருப்பூரில் பிரித்து விற்பனை செய்ய இருந்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து கஞ்சா கடத்தியதாக வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்….