திருவாரூர், செப். 14 –
குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்கா லட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் இவர் அப்பகுதியில் காய்கறி வியபாரம் செய்து வந்த நிலையில் தொழில் பாதிப்பு காரணமாகவும் தனது பிள்ளைகளின் படிப்பிற்காகவும் வருமானம் ஈட்டுவதற்காக வெளிநாடு சென்று அங்கு வேலைப்பார்த்திட முடிவெடுத்து, அப்பகுதியில் உள்ள ஏஜென்ட் மோகனா என்ற ஆந்திரா பெண்ணை தொடர்பு கொண்டு குவைத் நாட்டிற்கு கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி சென்றார்.
மேலும் முத்துக்குமரன் குவைத் சென்றடைந்ததும், தனது வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் எந்த வேலைக்காக அழைத்து வரப்பட்டோமோ அந்த வேலையை கொடுக்காமல் ஆடு ஒட்டகம் மேய்க்க பாலைவனத்தில் விட்டு அங்குள்ள குவைத் முதலாளி செய்த கொடுமைகள் குறித்து தனது வீட்டிலும் ஏஜென்ட் மோகனவிடம் தெரிவித்து உடனடியாக இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப வேண்டுமென கடந்த ஏழாம் தேதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் கடைசியாக ஏழாம் தேதி இரவு அங்கு பணியாற்றும் அதே ஊரைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடம் தனது துயரங்கள் குறித்து போனில் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென போன் உடைக்கும் சத்தம் அவர் நண்பருக்கு கேட்டுள்ளது. அதன் பிறகு முத்துக்குமாருக்கு அவருடைய நண்பர் தொடர்ந்து தொடர்பு கொண்டு அவரை தொலைபேசியில் பிடிக்க முடியவில்லை. எனவும் மேலும் குவைத் முதலாளிகள் அவரை கடுமையாக தாக்கி சுட்டுக் கொன்றதாக தெரிய வருகிறது. இது தொடர்பாக அங்குள்ள ஊடகங்களில் துப்பாக்கியால் இந்தியர் சுட்டு பலியான செய்தி வெளிவந்துள்ளது. அதன் பிறகு 9ஆம் தேதி தான் முத்துக்குமரன் மனைவி வித்தியாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமாருக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கின்ற மகனும், மூன்றாம் வகுப்பு படிக்கின்ற மற்றொரு மகனும் உள்ளனர். மேலும் முத்துக்குமாரும் திவ்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் ஆவார்கள்.
இந்த நிலையில் முத்துகுமாரின் உடலை தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றும், குவைத் முதலாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இந்திய அரசு குவைத் அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்கள். இதனைத்தொடர்ந்து நேற்று கூத்தாநல்லூர் தாலுகா அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று மனு அளித்தார்கள்