திருவையாறு, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை மாவட்டம், திருவையாறு ஐயாரப்பர் கோவில் சப்தஸ்தான பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பொம்மை பூ போடும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாரப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இக்கோவில் தருமபுரம் ஆதினம் மடத்திற்கு சொந்தமானதாகும். மேலும் திருத்தலத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு ராஜ கோபுரங்கள் கொண்ட பெருமை மிக்க இக்கோவிலில் சப்தஸ்தான பெருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அவ் விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத தேரோட்டம் நடைப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஏழூர் பல்லக்கு நேற்று முன்தினம் 25 ஆம் தேதி திருச்சேற்றுத்துறை, திருவேதுக்குடி, திருப்பழனம், திருக்கண்டியூர், திருப்பந்துருத்தி, திருமழபாடி, தில்லைஸ்தானம் ஆகிய ஏழு ஊர்களில் இருந்து கண்ணாடி பல்லக்கு புறப்பட்டு ஏழு கிராமங்களிலும் வலம் வந்து 26 ஆம் தேதியான நேற்று இரவு ஐயாரப்பர் கோவில் கீழ ராஜவீதி தேரடிக்கு வந்தடைந்தது.
அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பொம்மை பூ போடும் நிகழ்வு நடைப்பெற்றது. அதனை முன்னிட்டு திருவையாறு நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.





















