பாபநாசம், மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தென்னங்குடி பகுதியை சேர்ந்தவர், அய்யம்பேட்டையில் பிஎஸ்என்எல் டவர் மீது ஏறி தன்னை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்திய அவரை பத்திரமாக மீட்டு பாதுகாப்பு அதிகாரிகள் முதலுதவிக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா தென்னங்குடி, பெருமாக்கநல்லூர் பகுதியை சேர்ந்த, லட்சுமணன் (49), மனைவி தமிழ்ராணி (43) இவர்களுக்கு கௌரி (25) மோகன்ராஜ் (23), என்ற இரண்டு பிள்ளைகள் இருந்து வருகின்றனர்.
இந்தநிலையில் லட்சுமணன் பாரம்பரியமாக அய்யம்பேட்டை சக்கராப்பள்ளியை சேர்ந்த ஒருவரின் நிலத்தை பல ஆண்டு காலமாக குத்தகைக்கு சாகுபடி செய்து வந்தார். இந்நிலையில் அதே நபர் லட்சுமணனிடமே நிலத்தை விற்பதாக கூறி ரூபாய் 13-லட்சம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நிலத்தின் உரிமையாளர் அந்த நிலத்தை வேறொருவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விவசாய நிலத்தை மீண்டும் எனக்கே தர வேண்டும் எனக் கூறி அய்யம்பேட்டை சாவடி பஜார் தெருவில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
அத்தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறை மற்றும் அய்யம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஐஸ்வர்யா தலைமையிலான போலீசார் லட்சுமணனணிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, லட்சுமணன் பிஎஸ்என்எல் டவரில் இருந்து தானே கீழே இறங்கினார்.
மயக்க நிலையை அடைந்த அவரை கீழே படுக்க வைத்து முதலுதவி செய்த அதிகாரிகள் பத்திரமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதட்டம் காணப்பட்டது.