ஆவடி, ஆக. 04 –
ஆவடி மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மூன்று முக்கிய பொருள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்கல்லூரி மாணவிகள் நடத்திய மாபெரும் சைக்கிள் பேரணியை பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கல்லூரி வளாகத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் உள்ள மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக இயக்குநர் சு.கு.திருக்குமரன் தலைமையில் இந்தியா 76, செஸ் ஒலிம்பியாட் 44 , மற்றும் இந்திய சுதந்திரத்தை பேணி காத்தல் போன்ற மூன்று பொருள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அக்கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. அதனை பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பி.எஸ். சுந்தரவரதன் கொடியசைத்து கல்லூரி வளாகத்தில் இருந்து துவக்கி வைத்தார்.
கல்லூரி வளாகத்தில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணி பருத்திப்பட்டு, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, வழியாக சென்னீர்குப்பம், திருவேற்காடு, மாதிரிவீடு, கோலடி சாலை வழியாக சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி வந்து கல்லூரி வளாகத்தை அடைந்தது. இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக்கொண்டு விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பிய படி சென்றனர்.
இந்நிகழ்ச்சிக் குறித்து கல்லூரி முதல்வர் குமுதினி தெரிவிக்கையில், சைக்கிள் விழிப்புணர்வு பேரணியின் அடிப்படை நோக்கம் இன்றைய இளைஞர்களுக்கு கல்வியைப் போல விளையாட்டும் அவசியம் என்பதை உணர்த்துவதற்கும், இந்தியாவிலேயே அதிக கிராண்ட் மாஸ்டர்கள் உள்ள தமிழக வீரர்கள் தற்போது நடைபெறும் 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடர் வெற்றி பெற்று வருவதற்கு அவர்களுக்கு மேலும் ஊக்கம் அளிப்பதற்காகவும், மற்றும் இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதற்காக போராடிய தியாகிகளை நினைவுக்கூர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் மேலும் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும் இந்த மூன்று பொருள் கொண்ட விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது என்றார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி ஆசிரியர்கள் கல்லூரி மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.





















