தருமபுரம், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஶ்ரீஞானபுரீஸ்வரர் ஆலய பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்ற விழாவில் தருமபுர ஆதீனத்திற்கு நிரந்தரமாக வரவுள்ள சமயபுரம் யானை வேத சிவாகம பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி தாளத்திற்கு ஏற்றவாறு தனது தலையை ஆட்டியப்படி நாட்டியமாடிய நிகழ்வு பக்தர்களை ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்க வைத்தது. அதனைத்தொடர்ந்து அந்த யானைக்கு ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கல்மண் தளத்தினால் கட்டப்பட்டுள்ள யானை கொட்டகையை தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. இங்கு உள்ள ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் பெருவிழா, குருபூஜைவிழா ஆதீனகர்த்தரின் பட்டணப் பிரவேசவிழா இன்று காலை ஶ்ரீஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்த விழாவிற்காக வனத்துறையிடம் 15 நாள் அனுமதி பெற்று 34 வயதுடைய லக்கிமணி என்ற பெண் யானை வரவழைக்கப்பட்டது. இந்த யானையை தருமபுர ஆதீனம் தானமாக பெறவுள்ள நிலையில் கருங்கல் தளம். மற்றும் மண்தளம் அமைக்கப்பட்டு ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் யானை கொட்டகை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்து பழங்கள், காய்கறிகள் குளிர்ச்சிதரும் தர்பூசனி ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து யானையுடன் நின்று தருமபுர ஆதீனம் மற்றும் பக்தர்கள் ஆசி பெற்று புகைப்படம் எடுத்துகொண்டனர்.
முன்னதாக ஶ்ரீஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் சிறப்பு பூஜைகள் செய்தபோது தருமபுரம் ஆதீன வேத சிவாகம பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி தாளம், மந்திரங்களுக்கும் மேளதாள வாத்தியங்களுக்கு ஏற்றவாறு யானை தன் தலையை ஆட்டி நடனமாடியது தருமபுர ஆதீனத்தையும் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.