மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தொலைநோக்கு பார்வையுடன் உயர்நீதி மன்ற உத்திரவின் பேரில் ரூ. 463 கோடி மதிப்பிலான கதவணைப் பணிகள் 95 சதவீதம் நிறைவுப் பெற்ற நிலையில் தற்போது ஆமை வேகத்தில் நடைப்பெறுவதாக எழுந்தப் புகாரின் அடிப்படையில் அப்பணிகள் குறித்து நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆட்சியரிடம் அப்பணிகளை விரைந்து முடிக்க நடைவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் குமாரமங்கலம் என்ற இடத்தில் ரூ. 463 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான கதவணை ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
திருச்சியில் காவிரி ஆற்றில் பிரியும் கொள்ளிடம் ஆறானது, திருச்சி தஞ்சை நாகை மயிலாடுதுறை கடலூர் அரியலூர் பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
கொள்ளிடம் ஆறு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காட்டூர் என்ற இடத்தில் கடலில் கலக்கின்றது. கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுத்து நிறுத்தி உபயோகப்படுத்தவும் கடல் நீர் உட்புகாமல் தவிர்க்கவும் மயிலாடுதுறை மாவட்டம் ஆதனூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்கப்படும் என்று தொலைநோக்கு பார்வையுடன் 2014ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கால் 2019 ஆம் ஆண்டு ரூ. 463 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு கதவணை கட்டும் பணி துவங்கியது.
தற்பொழுது அப்பணி 95 சதவீதம் நிறைவடைந்த நிலையில் இறுதி கட்டப் பணிகள் மிகவும் காலதாமதமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் அப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று நேரில் ஆய்வு செய்தார். பணிகள் நிறைவடைந்த பின்பு குடிநீர் திட்டங்களுக்கு தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைக்கும் என்றும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் அப்போது அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





















