பொன்னேரி, ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு எனும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அவ்விழாவில் உள்ளூர் மட்டுமல்லாது பல்வேறு சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தந்து பங்கேற்றனர்.
பொன்னேரி திருவாயர்பாடியில் அமைந்துள்ளருள்மிகு ஸ்ரீகரிகிருஷ்ணப் பெருமாள் திருக்கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அவ்விழாவின் முக்கிய நிகழ்வான பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு எனும் நிகழ்ச்சி அங்கு வெகு விமர்சையாக நடைபெற்றது.
அப்போது அங்குத் திரண்டுயிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா எனவும் ஓம் நமச்சிவாய எனவும் பக்திப் பரவத்துடன் பக்தி முழக்கத்தினை விண் முட்டும் அளவிற்கு எழுப்பினார்கள்.அதனால் அப்பகுதி முழுவதும் பக்தி பரவச நிலையினைக் காண முடிந்தது.
மேலும் அத்திருவிழாவில் பொன்னேரி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஹரியையும், ஹரனையும் ஒரு சேர தரிசித்தனர். பிரம்மோற்சவத்தின் ஒரு நிகழ்வாக தேர்திருவிழா நாளை நடைபெற உள்ளது. வேறெங்கும் நடைபெறாத அபூர்வ நிகழ்வாக பொன்னேரியில் இந்த சந்திப்பு திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.