தஞ்சாவூர், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
சென்னை தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ.17.50 கோடி மதிப்புள்ள 28.5 கிலோ தங்க காசுகள் வாங்கி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரை தஞ்சையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள என்.ஏ.சி. ஜூவல்லரிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பிரபல நகைக்கடை இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் சந்தோஷ்குமார் கடந்த 13 ஆம்தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், கும்பகோணம் நகர் காலனி தீத்தர் தோட்டம் 2வது தெருவை சேர்ந்த கணேஷ் மற்றும் அவரது சகோதரர் சுவாமிநாதன் ஆகியோர் கடந்த 14.7.2020 முதல் 31.12.2023 வரையிலான நாட்களில் எங்கள் கடையில் இருந்து 38.6 கிலோ மதிப்புள்ள தங்க காசுகள் வியாபாரம் செய்ய வாங்கி சென்றனர்.
அதில் 9 கிலோ 475 கிராமுக்கு மட்டும் பணத்தை கொடுத்தனர். அதற்கு பிறகு மீதமுள்ள ரூ.17.50 கோடி மதிப்புள்ள 28 கிலோ 531 கிராம் தங்க காசுகளுக்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார்.
அவரளித்த அப்புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, கும்பகோணத்தை சேர்ந்த சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் என்.ஏ.சி. ஜூவல்லரி கடையில் 38.6 கிலோ தங்க காசுகள் வாங்கியதில் 28 கிலோ 531 கிராம் தங்க காசுகள் ஏமாற்றியது உறுதியானது.
மேலும் அவர்கள் மீது ரூ.600 கோடி மோசடி செய்ததாக தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2021ல் புதுக்கோட்டையில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த போது கைது செய்தனர்.
அதே நேரம் அவர்கள் எங்கு சென்றாலும் ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து செல்வது வழக்கம். அதனால் கும்பகோணம் பகுதியில் இவர்களை ‘ஹெலிகாப்டர் சகோதரர்கள்’ என்று அழைப்பது வழக்கம் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் 28 கிலோ 531 கிராம் தங்க காசுகள் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரான சுவாமிநாதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று தஞ்சையில் கைது செய்தனர்.
தொடர்ந்து தலைமறைவாக உள்ள கணேஷை தேடி வருகின்றனர். கணேஷ் தஞ்சாவூர் பாஜக வர்த்தக பிரிவு தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.