மயிலாடுதுறை, மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் பேட்டரி கார் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, நகராட்சி தலைவர் செல்வராஜிடம் பேட்டரி காரை மக்கள் பயன்பாட்டுக்காக வழங்கிய ஒஎன்ஜிசி காவிரி அசெட் உற்பத்தி பிரிவு தலைவர் மாறன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியில் நிகழாண்டில் மட்டும் ரூ.13 கோடி மதிப்பீட்டில் கல்வி, சுகாதாரம், குடிநீர், மருத்துவ உபகரணங்களுக்கு செலவிட்டுள்ளோம். என்றார்.
மேலும் வேளாண் மண்டல பாதுகாப்புச்சட்டம் இயற்றப்பட்ட பின்னர் துரப்பன பணிகளை முழுமையாக நிறுத்திவிட்டோம். அதற்கு முன்னதாக துளையிடப்பட்ட கிணறுகளில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது, சில கிணறுகள் பழுது ஏற்படும்போது பழுது நீக்கும் பணிகள் செய்யப்படுகிறது. உற்பத்தி குறையும்போதும், குறைபாடுகள் ஏற்பட்டாலும் ரிப்பேர் வேலைகள் செய்யப்பட்டு வருகிறது.என அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும் ஓஎன்ஜிசி வசம் கைவிடப்பட்ட கிணறுகள் எதுவும் கிடையாது. உற்பத்தி கிணறு, நின்றுபோன கிணறு, மீண்டும் ரிப்பேர் செய்யப்பட வேண்டிய கிணறுகள்தான் உள்ளன. துரப்பன பணியின் போது, எண்ணெய், எரிவாயு இல்லை என்பது தெரியவந்தால், அந்த நிலங்களை விவசாயிகளிடமே திருப்பி தந்துவிடுவோம். அந்த வகையில் காவிரி அசெட் பகுதியில் துளையிடப்பட்ட 790 கிணறுகளில் தற்போது 350 கிணறுகள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன எனவும் மேலும் அவற்றில் 90 எண்ணெய் கிணறு, 90 எரிவாவு கிணறு என்று மொத்தம் 180 கிணறுகளில் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 60 கிணறுகள் பழுது உள்ளதை அவ்வப்போது ரிப்பேர் செய்து எண்ணெய், எரிவாயு எடுக்க முடியுமா என்று முயற்சி செய்கிறோம். என்றார். அதன் மூலம் நாளொன்றுக்கு 3 மில்லியன் கியூபிக் மீட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது.
1989-இல் இந்தியாவின் தேவையில் உள்நாட்டு உற்பத்தி 69 சதவீதம் இருந்தது. தற்போது உள்நாட்டு உற்பத்தி 10 சதவீதத்துக்கு கீழ் குறைந்துவிட்டது. பொருளாதார வளர்ச்சிக்கு அன்னிய செலாவணி சேமிப்பு முக்கியம். ஓஎன்ஜிசி உற்பத்தி செய்யும் எண்ணெய், எரிவாயு மக்களின் வரிச்சுமையை குறைக்கும் என்றார்.






















