மயிலாடுதுறை, மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் புதிய பேருந்து நிலையம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடியே 42 லட்சம் செலவில் சீரமைத்து மேம்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதற்காக பேருந்து நிலையத்தின் பழைய சிமென்ட் சாலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டு அதன் பின்னர் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெயர்த்து எடுக்கப்பட்ட சாலையில் உள்ள கருங்கற்களை, கான்கிரீட் தடுப்பு கட்டை பணிக்கு பயன்படுத்துவதாகவும் நடைபெறும் பணியின் மதிப்பீடு மற்றும் என்னென்ன பணிகள் நடைபெறுகிறது என்பது பற்றிய விவர அறிவிப்பு பலகை அப்பகுதியில் வைக்கப்படவில்லை எனவும், அது குறித்து அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் கேட்ட போது அவர்களுக்கு விவரங்கள் தரப்படவில்லை எனவும் குற்றம் சாட்டி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி தலைமையில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட அதிமுகவினர்கள் இன்று திடீரென பேருந்து நிலைய மேம்பாட்டு பணி நடைபெறும் இடத்திற்கு வந்து, அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த பணியை தடுத்து நிறுத்தி, ஊழியர்கள், மேற்பார்வையாளரிடம் பணியை தரமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், பணியின் விவரங்களை நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு தெரிவிக்கும்படி அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என அப்போது முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தவறும் நிலையில் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டனர். அதனால் தற்காலிகமாக பேருந்து நிலையத்தினை மேம்படுத்தும் பணி நிறுத்தப்பட்டது.மேலும் அச்சம்பவத்தால் புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கும் இடத்தில் பரபரப்பு நிலவியது.






















