புதுவை, பிப். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்…

புதுவை யூனியன் பிரதேசம்,  கடற்கரையில் இன்று நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர். அந்நிகழ்வில்  பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்த பின்பு இறை வழிபாடு செய்தனர்.

மாதங்களில் மகத்தான மாதம் மாசி மாதம் ஆகும். மாசி மாதத்தில் நாம் செய்யும் எந்த காரியமும் இரட்டிப்பு பலன்கள் தரும் என்பது ஐதீகம். அந்த வகையில் மாசிமகத்தையொட்டி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.

மேலும் அந் நிகழ்வினை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் அதனையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட  100 க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

குறிப்பாக பிரசித்தி பெற்ற விழுப்புரம் மாவட்டம் மயிலம் முருகன்,  தீவனூர் பொய்யாமொழி விநாயகர், செஞ்சி ரங்கநாதர், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, திண்டிவனம் நல்லியகோடான் நகர் அலர்மேல் மங்கா சமேதா சீனிவாச பெருமாள், மிகவும் பிரசித்தி பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், ராமகிருஷ்ணாநகர் லட்சுமி ஹயக்கிரீவர், பிள்ளைச்சாவடி சாய்பாபா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து வந்த உற்சவர்கள் கடலில் தீர்த்தவாரி முடித்து கடற்கரையோரம் கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்த மாசிமக பெருவிழா தீர்த்தவாரியை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடி சாமி தரிசனம் செய்தனர். அதற்காக அவர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கடற்கரையில் கூடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தும் வரிசையில் நிற்கும் அனைத்து சாமிகளையும் வழிபட்டு சென்றனர்.

மேலும் தீர்த்தவாரிக்கு வந்த பக்தர்கள் பலர் சாமி தரிசனம் செய்து விட்டு கடலில் புனித நீராடினர். அவர்கள் கடலின் ஆழமான பகுதிக்கு சென்று விடாதவாறு போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தபடி இருந்தனர். கூட்டத்தில் பக்தர்களிடம் திருட்டு கும்பல் கைவரிசை காட்டுவதை தவிர்க்க, போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து அங்கிருந்து பைனாகுலர் மற்றும் டிரோன் கேமரா மூலமாகவும் கூட்டத்தினரை கண்காணித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் நகரில் ஒயிட் டவுன் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மாசிமகத்தையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here