புதுச்சேரி, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ….
புதுச்சேரி யூனியன் பிரதேசம், நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் தியாகு. மேலும் அவர் இந்திய ஜனநாயக கட்சி புதுச்சேரி மாநில இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இந்நிலையில் உடல் நிலை சரியில்லை என்பதற்காக அவரது ஒன்றறை வயது சாசிக்கா எனும் பெண் குழந்தையை ஜிப்மர் மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு ஆகஸட் மாதம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அப்பொழுது ஸ்கேன் செய்வதற்கு முன்பாக குழந்தையின் உடலில் செலுத்தும் மருந்தை, அதிக அளவில் மருத்துவர் அக்குழந்தையின் உடலில் செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அக்குழந்தை அதன் சுயநினைவை இழந்துள்ளது (கோமா) பின்னர் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக அக்குழந்தையை அம் மருத்துவமனையில் மருத்துவர்கள் வெண்ட்டிலெட்டரில் வைத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் பெற்றோர் கேட்கும் போது குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருவதாகவே மருத்துவர்கள் கூறி வந்துள்ளனர். தொடர்ந்து கேட்டால் பதில் கூறாமல் சென்றுள்ளனர். இந்நிலையில் மருத்துவர்களின் கூற்றுப் படி தொடர்ந்து சிகிச்சை வழங்கி வந்த நிலையில் அக்குழந்தை உயிரிழந்தது.
அதையடுத்து இந்திய ஜனநாயக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாதுரை, தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் ஸ்ரீதர், பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தினர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், “கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுப்பதற்கு முன் தவறான மருந்து கொடுத்ததால் குழந்தை கோமா நிலைக்கு சென்றுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தையை வெண்டிலேட்டர் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்க தொடங்கினர்.
குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்களிடம் குழந்தையின் நிலைமை குறித்து கேட்டால் சரியான பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தி வந்தனர்.
தொடர்ந்து மருத்துவரை கேள்வி கேட்டதால் குழந்தையின் உறவினர் மீது போலீசில் பொய் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து குழந்தைக்கு பல மாதங்களாக வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். பல போராட்டங்கள் நடத்தினோம். தற்போது குழந்தை உயிரிழந்துள்ளது. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த டி நகர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.