திருவண்ணாமலை, செப்.15-
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 116 பயனாளிகள் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பண்ணை குட்டைகளை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்யும் வகையில் வேல்டு ரெக்கார்டு குழு அதிகாரி டாக்டர் பி.சிவக்குமரன் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தலா ரூ.1.78 லட்சம் என ரூ.20 கோடி மதிப்பில் 1121 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இப் பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக பணிகள் நடைபெற்றன.
கடந்த ஆகஸ்டு 12ந் தேதி தொடங்கப்பட்டு கடந்த 8ந் தேதியுடன் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும் திட்டபணியை குறுகிய காலத்தில் (28 நாட்கள்) முடிக்கப்பட்டுள்ளதால் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்வதற்கான முயற்சி மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இதையட்டி வேல்டு ரெக்கார்டு அமைப்பை சேர்ந்த 11 பேர் கொண்ட குழுவினர் கடந்த 3 நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் சின்னகாங்கியனூர் சு.கம்பப்பட்டு சின்னகல்லபாடி பெரியகல்லபாடி சு.பாப்பம்பாடி தலையாம்பள்ளம் நரியாப்பட்டு பாவுப்பட்டு உள்பட 116 ஊராட்சிகளில் பண்ணை குட்டை அமைக்கப்பட்ட பணியை ஆய்வு செய்து பயனாளிகளிடம் வேல்டு ரெக்கார்டு குழு அதிகாரி டாக்டர் பி.சிவக்குமரன் கலந்துரையாடினார்.
ஒவ்வொரு பண்ணை குட்டைகளும் 72 அடி நீளமும் 36 அடி அகலமும் 5 அடி ஆழமும் எனும் அளவில் 3 லட்சத்து 63 ஆயிரம் லிட்டர் மழை நீரை தேக்கி வைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) சு.அருணாசலம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேதுராமன், ஒன்றிய உதவி பொறியாளர்கள் இந்திராகாந்தி, அண்ணாதுரை, வினோத், பணி மேற்பார்வையாளர்கள் வாணி, ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் இரா.சுப்பிரமணியன், ஸ்ரீலட்சுமி ராஜகணேஷ் தேசம்மாள் கோவிந்தராஜ் கே.பாலகிருஷ்ணன், எஸ்.ஆண்டாள், வி.கீதா, துணைத் தலைவர்கள் ரத்தினம்மாள் பொன்னுசாமி, வச்சலா ரமேஷ், கங்கா கவுரி, கே.வீரம்மாள், எஸ்.லட்சுமணன், ஊராட்சி செயலாளர்கள் ஆர்.இளவரசு, துரை, கே.ராமன், செல்வகுமார், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.