கஞ்சிபுரம், பிப். 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்குகின்ற குமாரக் கோட்டம் முருகன் கோவிலில் இன்று தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடைப்பெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்று பொது மக்களுக்கு உணவு பரிமாறி மக்களோடு மக்களாக உடன் அமர்ந்து உணவருந்தினார்.

காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதி பகுதியில் உள்ள கந்தபுராணம் அரங்கேற்றிய திருக்கோவிலான பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி முருகன் திருக்கோவிலில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்று பொதுமக்களுக்கு  தனது கையால் உணவு பரிமாறி சமபந்தி விருந்தினை துவக்கி வைத்து,அதன் பின் முதல் பந்தியில் மக்களோடு மக்களாக  உடன் அமர்ந்து உணவருந்தினார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மாவட்ட ஊராட்சிக் குழுத்துணை தலைவர் நித்யா சுகுமார் ஆகியோரும் மக்களுடன் அமர்ந்து சமபந்தி உண்டு மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது பந்தியில் பொதுமக்கள் அமர வைக்கப்பட்டு ,நீண்ட நேரம் ஆகியும் உணவு வழங்காததால் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சமபந்தி எனக் கூறிவிட்டு முதல் பந்தியில் அரசு அலுவலர்கள் உணவு அருந்திய போது அனைவருக்கும் உணவு கிடைத்தது, ஆனால் இரண்டாவது பந்தியில் பொதுமக்கள் அமர வைக்கப்பட்டு நீண்ட நேரம் ஆகியும் உணவு பரிமாறாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். குறிப்பாக பந்தியில் ஒருபுறம் பொது மக்கள் சாப்பிட்டு கொண்டிருந்த வேளையில், மறுபுறம் வெறும் வாழையிலை மட்டும் போட்டு விட்டு குடிநீர்,சாப்பாடு கூட பரிமாறாமல் பல மணி நேரமாக காத்துக்கிடந்ததால் உணவருந்த வந்த பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி மனம் நொந்து போயினர். இதன் பின்பு நீண்ட நேரத்திற்கு பிறகு பொது மக்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.

பசியோடு உணவருந்த வந்த பொதுமக்களுக்கு சாப்பாடு போடாமல் பல மணி நேரமாக காக்க வைத்தச் செயல் அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் சரியான திட்டமிடல் இல்லையென அம்மக்கள் புலம்பிக் கொண்டு சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here