குன்றத்தூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் குன்றத்தூரில் உள்ள ஸ்ரீ மேத்தா நகரில், சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் அறங்காவலர் இக்கோவில் அருகே உள்ள களம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து மண்டபம் கட்டி பல லட்ச ரூபாய் வருவாய் ஈட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
மேலும் அது தொடர்பாக பலமுறை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடமும் வருவாய்த்துறை இடமும் முறையிட்டு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க படவில்லை என அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள அறங்காவலர் பத்மநாபன் என்பவர் விசாரணைக்கு வரும் அதிகாரிகளிடம் பொதுமக்களிடமும் மண்டபம் கோவிலுக்கு சார்ந்த இடம் என்றும் கோவில் ராஜகோபுரமும் களம் புறம்போக்கு இடத்தில் இருப்பதாகவும், ஆக்கிரமிப்பாகற்றினால் கோவில் ராஜகோபுரம் இருக்க வேண்டும் என பொய்யான தகவலை பரப்பி வருகிறார் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தொடர்ந்து அப்பகுதி மக்கள் பலமுறை முன்வைத்து வந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குறிப்பிடப்பட்டுள்ள இடம் அரசு புறம்போக்கு எனவும் அந்த கட்டிடத்தை அகற்ற அரசு சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதனை அடுத்து கடந்த ஜனவரி மாதம் இருபதாம் தேதியும் படிவம் 6 வழங்கப்பட்டுள்ளது. கால அவகாசம் வழங்கியும் இதுவரை ஆக்கிரமிப்பு, அகற்றப்படாமல் இருப்பதாக கூறி மீண்டும் இன்று மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு 20க்கும் மேற்பட்ட பெண்களுடன் வந்த அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் அந்த கட்டிடத்தை அகற்ற புகார் அளித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர் மண்டபத்தில் பல லட்ச ரூபாய் வரை வாடகை பெற்று முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர்.






















