கும்பகோணம், டிச. 20 –
தஞ்சைமாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கோவையில் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று திருபுவனம் பேரூராட்சி சார்பில் தனியார் மஹாலில் பேரூராட்சி தலைவர் அமுதவல்லி கோவிந்தன், தலைமையில் நடைபெற்றது. இதில் பேரூராட்சி துணைத் தலைவர் ரவிசங்கர், திருவிடைமருதூர் பேரூராட்சி தலைவர் புனிதா மயில்வாகனன், செல் அலுவலர் சிவலிங்கம், வட்டாட்சியர் பொறுப்பு சுசீலா, பேரூராட்சி உதவி இயக்குனர் மஸ்கின் அபூபக்கர், காவல் ஆய்வாளர் ராஜேஷ், மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் இம்முகாமில், திருபுவனத்தை சுற்றியுள்ள பகுதியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மக்கள் அடிக்கடி அணுகுகின்ற துறைகளான, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, கூட்டுறவு துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை, எரிசக்தித் துறை, மின்சாரத்துறை, ஆகிய 13 அரசுத் துறைகளுக்குட்பட்ட மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 350 க்கும் மேற்பட்ட மனுக்களை அத்துறைசார்ந்த அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். அதில் விரைவான ஆய்வுகளுக்குப் பின் 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.