கும்பகோணம், ஆக. 25 –
கும்பகோணத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சர் காலை உணவு வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. முதற் கட்டமாக நகராட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் ஆயிரத்து 545 தொடக்கப் பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
மேலும் இத்திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளில் முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழாவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருக்குவளையில் இன்று தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள 60 பள்ளியில் 3548 மாணவ மாணவிகளுக்கு இன்று முதலமைச்சரின் காலை உணவு வழங்கப்பட்டது.
அதன் பகுதியாக பழவாத்தன் கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு வழங்கும் விரிவாக்க தொடக்க விழா நடைபெற்றது. அவ்விழாவில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் விழாவினை தொடக்கி வைத்து பள்ளிக் குழந்தைகளுடன் அமர்ந்து, உணவருந்தினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கோட்டாட்சியர் பூர்ணிமா குழந்தைகளுக்கு உணவு பரிமாறி உபசரித்தார். மேலும், வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி ஆணையர் பூங்குழலி, பழவாத்தன் கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், ஒன்றிய துணைத் பெருந்தலைவர் கணேசன், தலைமை ஆசிரியர் சாந்தி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.