நன்னிலம், ஆக. 14 –
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருகொட்டாரம் ஊராட்சியில் அமைந்துள்ளது மணலி என்ற கிராமம். இந்த கிராமம் தமிழ்நாடு பாண்டிச்சேரி எல்லையில் அமைந்துள்ளது.
திருக்கொட்டாரம் ஊராட்சியில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு அரசியல்வாதிகள் ஓட்டு கேட்க மட்டும் தான் சொல்கிறார்கள் எனவும் தங்களுடைய கிராமத்திற்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை எனவும், மேலும் நாங்கள் அனைவரும் ஒரு தீவில் வசிப்பதுப் போன்ற உணர்வோடு வாழ்ந்து வருவதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களுடைய ஊரிலிருந்து தங்களுடைய மாவட்டமான திருவாரூருக்கு செல்வதற்கு ஒன்று பாண்டிச்சேரி மாநில எல்லையை கடந்து தான் செல்ல வேண்டும் என்றும், இல்லையெனில், அப்பகுதியில் உள்ள ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும் எனவும், தெரிவிக்கும் அக்கிராம மக்கள், அப்படியே அவ்வாற்றைக் கடக்க முயற்சித்தாலும், கழுத்தளவு தண்ணீரில் கடந்தும் படுமோசமாக உள்ள சாலையையும் கடந்து செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலையில் அக்கிராம மக்கள் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எங்களின் பிரச்சினையை அரசு உணர்வு பூர்வமாக கவனம் செலுத்தி, அவ்வாற்றினை கடந்து செல்வதற்கு புதிய பாலம் அமைத்தும் மேலும் படு மோசமாக உள்ள சாலையினை சீரமைத்து தரும்படி அக்கிராம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய தேவையான பொருட்கள் மற்றும் பள்ளி கல்லூரி மற்றும் பணிக்கு செல்தற்கும் நாங்கள் அந்த ஆற்றைக் கடந்துதான் செல்கிறோம் எனவும், இந்நிலையில் தற்போது அவ்வாற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மரப்பாலமும் எப்போது வேணாலும் இடிந்து விழும் நிலைமையில் உள்ளது எனவும், அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இவ்வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தராததால் தற்போது அக்கிராம பிள்ளைகள் பாண்டிச்சேரி மாநிலத்தில் படிக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளதாக அவர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதில் ஒரு சிலர் பிள்ளைகளின் பெற்றோர்கள் மட்டுமே தங்கள் வீட்டு பிள்ளைகளை பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிப்பிற்காக பாண்டிச்சேரி எல்லையை கடந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளம் பகுதியில் உள்ள பள்ளிக்கு படிக்க அனுப்புகிறார்கள்.
சரியான பாலம் வசதி சாலை வசதி இருந்தால் நாங்களும் எங்கள் பிள்ளைகளை ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை திருவாரூர் மாவட்டத்தில் படிக்க வைத்து தமிழக அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கக்கூடிய சலுகைகளையும், 7.5 இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசு ஒதுக்கீடுகளையும் எளிதாக பெறுவோம் என இந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்
சுதந்திரத்திற்கு முன்பும் சரி சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட எங்கள் ஊருக்கு எந்தவித அடிப்படை வசதியும் அரசு செய்து கொடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் புலம்புகிறார்கள் மேலும் அக்கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலனவர்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்சினைக் குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்ட போது, இந்த பகுதி மக்கள் அனைவரும் பாண்டிச்சேரி மாநிலப் பகுதியை பயன்படுத்துவதாகவும், அங்குதான் அனைத்து வித தேவைகளுக்கும் சென்று வருவதாகவும் எங்களிடம் எந்தவித கோரிக்கையும் வரவில்லை என்றும் ஆகவே மக்களிடம் பேசி அவர்கள் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தனித்தீவாக உள்ள திருவாரூர் மாவட்ட மணலி கிராமத்திற்கு உடனடியாக பாலம் வசதியையும், சாலை வசதியையும் ஏற்படுத்தி தருமாறு இப்பகுதி மக்கள் மீண்டும் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
பேட்டி: தியாகராஜன் கிராமவாசி