கும்பகோணம், ஜூலை. 02 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகாவிற்குட்பட்ட வயல் சூழ்ந்த பகுதியான பாகவதபுரத்தில் அமைந்துள்ளது, ககோள மகரிஷி, அஷ்டவக்ரம மகரிஷி, ஜனக மகரிஷி பாஸ்கரராயர் சுவாமி ஆகியோர் பூஜித்து வழிப்பட்டு வந்த செண்பகவள்ளி நாயகி உடனமர் ககோளநாதர் ஆலயமாகும்.
மேலும் இவ்வாலயம், திருக்காயிலாய பொதிகை முனி பரம்பரை 1001வது குருமகா சன்னிதானம் கந்தர்வ லோக ஜோதி பிரகாசி சத்குரு வெங்கட்ராம சுவாமிகளின் அருளாசியுடன் கோவை அரன்பணி அறக்கட்டளை பங்களிப்பிலும் அடியார்கள் ஒன்று கூடி முன் நின்று வழி நடத்தும் ஆலயமாகும்.
இச்சிறப்பு மிக்க இவ்வாலயத்தின் அருள் நன்னீராட்டு விழாவிற்காக திருப்பணிகள் நடைப்பெற்று நிறைவுப் பெற்றதைத் தொடர்ந்து, அவ்வாலயத்தில் கடந்த 23 ஆம் தேதி கிராம தேவதை வழிபாடு 25ஆம் தேதி விநாயகர் வேள்வி நிலத்தேவர் வழிபாடு கடந்த 26 ஆம் தேதி முன்னவனே முன் நின்று நடத்தும் முதல் கால வேள்வி தொடங்கி நான்கு கால வேள்வியுடன் நிறைவு பெற்றது.
தொடர்ந்து, திருக்குடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு மூலகருவறை விமான கலசங்களுக்கு திருக்குட அருள் நன்னீராட்டு விழா வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
பின்பு, கருவறை மூல திருமேனிகளுக்கு திருக்குட அருள் நன்னீராட்டு விழா நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் ரமேஷ் ஆலய ஸ்தபதி பைரவ கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பக்தர்கள் மனமகிழும் அளவில் வெகுச்சிறப்பாக செய்திருந்தனர்.























