உத்திரமேரூர், ஏப். 20 –
உத்திரமேரூர் அடுத்த கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 58 வயதுடைய விவசாயி ராஜேந்திரன் மேலும் இவர் அப்பகுதியில் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரது நிலத்திற்கு அருகே அக்கிராமத்திற்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நீர்நிலை புறம் போக்கு நிலத்தில் அதேக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக அந்நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து, மேலும் அந்நிலத்தில் பயிர் வைப்பதற்காக உழுது வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயி ராஜேந்திரன் அப்பகுதி வருவாய் துறையினரிடம் அப்பிரச்சினைக் குறித்து தகவல் மற்றும் புகார் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.
மேலும் அப்புகார் மனு மீது வருவாய்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த விவசாயி ராஜேந்திரன் கடம்பூர் கிராமத்தில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி அமர்ந்து கொண்டு கிராமத்திற்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலத்தினை தனியாரிடம் இருந்து உடனடியாக மீட்க வேண்டும். எனவும், மேலும் அரசு நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது பினையில் வர முடியாதப்படி வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தி அவர் முழக்கங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
மேலும் அதனைத்தொடர்ந்து அத்தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உத்தரமேரூர் போலீசார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு போராடி விவசாயி ராஜேந்திரனிடம் சமரசமாக பேசியதின் பேரில் ராஜேந்திரன் கீழே இறங்கி வந்தார்.
அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் விவசாயி ராஜேந்திரனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உடல் பரிசோதனை மேற்கொண்டு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பு நிலவியது.























