கும்பகோணம், ஏப். 04 –
பங்குனி உத்திர பெருவிழாவினை முன்னிட்டு கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீநாகேஸ்வரசுவாமி மற்றும் ஆதி கம்பட்ட விஸ்வநாதசுவாமி திருக்கோவில்களிலிருந்து பஞ்சமூர்த்திகள் மகாமககுளக்கரையில் எழுந்தருள, அங்கு அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பங்குனி உத்திர தீர்த்தவாரி நடைபெற்றது,
மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டு மகாமக குளத்தில் புனித நீராடி கரையில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் உளம் மகிழ்ந்தனர்.
கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்தர பெருவிழா கடந்த மாதம் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் யானை, சிம்ம, சேஷ, குதிரை, காமதேனு, கிளி, பூத, சூரிய பிரபை, சந்திர பிரபை என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
மேலும் இவ்விழாவின் 10 ஆம் நாளான இன்று நண்பகல் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, பிரகன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமியும், அதுபோலவே ஆனந்தநிதியம்பிகை சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதசுவாமியும் பஞ்ச மூர்த்திகளுடன் தனித்தனி வாகனங்களில் மகாமக திருக்குளத்தின் கரைக்கு எழுந்தருள, அங்கு அஸ்திர தேவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது
தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் அஸ்திரதேவர்களுடன் மகாமக திருக்குளத்தில் மும்முறை முங்கி எழ, பங்குனி உத்திர தீர்த்தவாரி வெகுச்சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து கரையில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு மகாமக திருக்குளத்தில் புனித நீராடியும், கரையில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்தனர்.






















